எத்தியோப்பிய விமான விபத்து: சடலங்கள், தடயங்கள் தேடப்பட்டு வருகின்றன

அட்டிஸ் அபாபாவிலிருந்து நேற்று புறப்பட்டு நைரோபியை நோக்கிச் சென்ற எத்தியோப்பியன் ஏர்லைன்ஸ் விமானம், புறப்பட்ட ஆறு நிமிடங்களிலேயே விபத்துக்குள்ளாகியதையடுத்து இன்று எத்தியோப்பியாவில் தேசிய அளவில் துக்கம் அனுசரிக்கப்பட்டு வருகிறது.

விமானத்தில் இருந்த எட்டு சிப்பந்திகள், 35 நாடுகளைச் சேர்ந்த 149 பயணிகள் என 157 பேர் விபத்தில் உயிரிழந்தனர்.

அதனைத் தொடர்ந்து இன்று சடலங்களையும் விபத்துக்குள்ளானதற்கான தடயங்களையும் விசாரணை குழுவைச் சேர்ந்த அதிகாரிகள் தேடிவருகின்றனர்.

புத்தம் புதிய விமானத்திற்கு ஏன் இத்தகைய நிலை ஏற்பட்டது என்பது குறித்து போயிங் நிறுவனம், தேசிய விமானப் போக்குவரத்து ஆணையம், அனைத்துலக நிபுணர்கள் ஆகியோருடன் எத்தியோப்பிய ஏர்லைன்ஸ் சேர்ந்து ஆராயும் என்று கூறப்பட்டுள்ளது.

அட்டிஸ் அபாபாவின் தென்கிழக்குப் பகுதியில் உள்ள கிராமத்தின் திடலில் விமானம் விழுந்து நொறுங்கியதாக நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

விமானம் தரையில் விழும் முன்னரே தீப்பற்றி எரிந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.