பருவநிலை பிரச்சினையை எடுத்துக்கூற உலகளவில் மார்ச் 15ல் இளையர்கள் போராட்டம்

பருவநிலை மாற்றம் குறித்த இளையர்களின் கண்ணோட்டத்தை மற்றவர்கள் அறிந்திடவேண்டும் என்பதற்காக இளையர்கள் எதிர்வரும் வெள்ளிக்கிழமை (மார்ச் 15) வேலைநிறுத்தத்தில் ஈடுபடவுள்ளனர்.

அமெரிக்கா, மலேசியா, ஹாங்காங் உட்பட 80க்கும் மேலான நாடுகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மாணவர்கள் இந்தப் போராட்டத்தில் ஈடுபடவிருக்கின்றனர்.

பருவநிலை மாற்றம் கவலைக்குரியது என்று பெரியவர்கள் எண்ணவேண்டும் என்பதற்காகவும் அரசாங்கங்கள் உடனே அதற்குத் தக்க முயற்சிகளை எடுக்கவேண்டும் என்பதற்காகவும் அந்த ஒரு நாளுக்கு மாணவர்கள் பள்ளிக்குச் செல்லாமல் இருக்கப்போவதாகக் கூறப்படுகிறது.

சுவீடனைச் சேர்ந்த கிரேடா தன்பர்க் என்பவரால் சென்ற ஆண்டு இந்த உலகளாவிய இளையர் இயக்கம் தொடங்கப்பட்டது. அவரது அரசாங்கம் பருவநிலை மாற்றம் குறித்து முயற்சி எடுக்கவேண்டும் என்று வலியுறுத்துவதற்காக அவர் பள்ளிக்குச் செல்ல மறுத்த செயல் பல இளையர்களை ஈர்த்துள்ளது.