$600,000 காப்புறுதித் தொகை பெற கையை அறுத்த சுலோவேனிய பெண்

காப்புறுதிப் பணத்தைப் பெறுவதற்காகவே ரம்பத்தால் தமது கையைத் துண்டித்துகொண்ட 21 வயது சுலோவேனிய பெண்ணும் அவரது 29 வயது உறவினரும் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

காப்புறுதித் தொகையாக 400,000 யூரோ ($600,000) பெறும் நோக்கத்துடன் அவர் அவ்வாறு செய்ததாக அந்நாட்டு போலிசார் அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

மூன்று உறவினர்களுடன் சேர்ந்து, விபத்தில் சிக்கியதுபோல அவர் பாவனை செய்ததாகத் தெரிவிக்கப்பட்டது. இவ்வாண்டின் முதல் பகுதியில் அவர்கள் ஐந்து வெவ்வேறு காப்புறுதி நிறுவனங்களில் உயிருக்கும் காயத்திற்கும் இழப்பீடு வழங்கும் காப்புறுதித் திட்டங்களில் கையெழுத்திட்டுள்ளனர்.

நால்வரும் கைது செய்யப்பட்டு, பின்னர் இருவர் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

சுமார் 380,000 யூரோ இழப்பீடும் வாழ்க்கை முழுதும் மாதத்திற்கு 3,000 யூரோ பணவழங்கீடும் பெற அந்த மாது இந்தத் திட்டத்தைத் தீட்டியுள்ளார். சராசரியாக சுலோவேனியாவில் மாதச் சம்பளம் 1,000 யூரோ.

வேண்டுமென்றே துண்டிக்கப்பட்ட கைப் பகுதியை வீட்டிலேயே வைத்துவிட்டு மருத்துவமனைக்கு அந்த நால்வரும் சென்றுள்ளனர். அப்போதுதான் நிரந்தர முடமாக அது கருதப்படும் என்றும் அதிக இழப்பீடு வழங்கப்படும் என்றும் அவர்கள் எண்ணினர்.

இருப்பினும் அதிகாரிகள் உடனே தக்க நேரத்தில் அந்தக் கைப் பகுதியை எடுத்து வந்து பெண்ணின் கையுடன் சேர்த்து தையல் போட்டனர்.