பாசிர் கூடாங் நெருக்கடியை நன்கு சமாளித்தனர்: மகாதீர்

கோலாலம்பூர்: மலேசியாவின் ஜோகூர் பாருவின் பாசிர் கூடாங்கில் நச்சுவாயு பிரச்சினையைச் சமாளிப்பவர்கள் நன்றாகச் செயல்பட்டு வருகின்றனர் என்று மலேசிய பிரதமர் மகாதீர் நேற்று செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.

சுங்கை கிம் கிம் ஆற்றில் வீசப்பட்ட 2.43 டன் ரசாயனக் கழிவுகளின் காரணமாக அப்பகுதியில் வசித்து வரும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடியிருப்பாளர்களுக்கு மருத்துவக் கவனிப்பு வழங்கப்பட்டு வருகிறது.

இது போன்ற சம்பவம் முதல்முறையாக நடந்தபோதிலும், இந்த நெருக்கடியைக் காவல்துறையினர், தீயணைப்பாளர்கள், மருத்துவ ஊழியர்கள் போன்ற அதிகாரிகள் நன்கு திறம்பட சமாளித்து வருகின்றனர் என்று மகாதீர் குறிப்பிட்டார்.

"பொதுமக்கள் இது கடுமையான நிலைமை எனக் கருதுகின்றனர். ஆனால் இதுபோன்ற நெருக்கடிகளைச் சமாளிக்க அதிகாரிகளுக்குத் திறமை உண்டு என்பதை மறந்திட வேண்டாம்," என்று வலியுறுத்தினார் மலேசிய பிரதமர்.

இந்தப் பிரச்சினை கட்டுக்குள் இருக்கிறது என்றும் பாதிக்கப்பட்ட இடங்களில் அவசரநிலை அறிவிக்கத் தேவையில்லை என்றும் மகாதீர் கூறினார்.