நச்சு வாயு கசிவு; பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,500க்கு அதிகரிப்பு

பாசிர் கூடாங்: மலேசியாவின் பாசிர் கூடாங்கில் நிகழ்ந்த நச்சு வாயுக் கசிவு சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,500க்கு அதிகரித்துள்ளது.
பாசிர் கூடாங் உள்ளரங்கில் உள்ள மருத்துவ நிலையத்தில் 780 புதிய சம்பவங்கள் பதிவாகியதால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை உச்சத்தைத் தொட்டுள்ளது.
இருந்தாலும் மருத்துவமனையில் 113 பேர் மட்டுமே சிகிச்சை பெற்று வருகின்றனர் என்று ஜோகூர் மாநில சுகாதார, சுற்றுச்சூழல், வேளாண்மை குழு வின் தலைவர் சஹ்ருடீன் ஜமால் தெரிவித்தார். மருத்துவமனையில் மேல் சிகிச்சை பெற்ற தனிப்பட்டவர்களின் எண்ணிக்கை 202.
சுல்தானா அமினா மருத்துவமனையிலும் சுல்தான் இஸ்மாயில் மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்ற 531 பேர் வீடு திரும்பி விட்டதாகவும் அவர் கூறினார்.
சுங்கைக் கிம் கிம் ஆற்றில் சட்ட விரோதமாக வீசப்பட்ட ரசாயனக் கழிவிலிருந்து நச்சு வாயு கிளம்பியதால் 111 பள்ளிகளை மூடவேண்டிய கட்டாயமும் ஏற்பட்டது.
இந்நிலையில் சுங்கைக் கிம் கிம் சுற்று வட்டாரத்தை பேரிடர் பகுதியாக அறிவிக்கப்பட்டுப் பொது மக்களை வெளியேற்ற அவசரநிலைப் பிரகடனப்படுத்தப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.
ஆனால் இதற்கு அவசிய மில்லை என்று அரசாங்கம் தெரிவித்தது. 
பொதுமக்களை வெளியேற்றும் அளவுக்கு நிலைமை மோசமாக வில்லை என்று ஜோகூரில் உள்ள சுல்தான் இஸ்மாயில் மருத்துவமனைக்கு நேரில் வருகையளித்த டாக்டர் மகாதீர் சொன்னார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய திரு மகாதீர், “இந்தச் சம்பவத்தைக் கையாளும் அரசாங் கத்தின் மீது பொதுமக்கள் நம் பிக்கை வைக்க வேண்டும்,” என்றார்.
மோசமான நிலைமையைக் கடந்துவிட்டோமோ என்று கேட்டதற்கு இப்போது அதை உறுதிப்படுத்த முடியாது என்றார்.
“முன்னெச்சரிக்கை நடவடிக் கைகள் எடுக்கப்படாவிட்டால் நிலைமை மோசமடைய வாய்ப்புள்ளது. இந்தச் சம்பவத்தை எப்படி கையாள வேண்டும் என்பது அதிகாரிகள்  கையில்தான் உள்ளது,” என்று பிரதமர் குறிப்பிட்டார்.
இதற்கிடையே இந்த விவகாரத்தில் சுகாதார அமைச்சுத் தாமதமாக செயல்பட்டதாகக்  கூறப்படுவதை அரசாங்கம்  மறுத் துள்ளது.