ஹாங்காங் எம்டிஆர் ரயில்கள் மோதின; ஓட்டுநர் ஒருவர் காயம்

ஹாங்காங்கில் இரண்டு பெரு போக்குவரத்து (எம்டிஆர்) ரயில்கள் சோதனையின்போது மோதிக்கொண்டன. இன்று அதிகாலை நடந்த இந்தச் சம்பவத்தால் திங்கட்கிழமை காலை போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

இரு ரயில் ஓட்டுநர்களும் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.

ஒருவருக்குக் காலில் காயம். மற்றொருவர் புகை நுகர்ந்ததால் பாதிக்கப்பட்டதாக அந்நாட்டு போலிஸ் தெரிவித்துள்ளது.

புதிய சமிக்ஞை முறையை ரயில் நிறுவனம் சோதித்து வந்தது. சுவென் வான் பாதையில் காலை மூன்று மணியளவில் இந்தச் சம்பவம் நடந்தது.

ரயில் பெட்டிகளின் கதவுகள் கழன்றுகிடந்த புகைப்படங்களும் ரயில் பெட்டிகளுக்குள் உடைந்த கண்ணாடி சிதறல்கள் கிடக்கும் புகைப்படங்களும் ஊடகங்களில் வலம் வந்துள்ளன.

ஒரு ரயில் தண்டவாளத்திலிருந்து தடம்புரண்டு ஒரு பக்கமாகச் சாய்ந்த நிலையில் இருந்ததை அந்தப் புகைப்படங்கள் காட்டின.

ரயில் பாதையின் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இன்று சேவை நிறுத்தப்பட்டுள்ளது என்றும் பயணிகள் மாற்றுப் போக்குவரத்து முறைகளைப் பயன்படுத்துமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.