மொசாம்பிக், ஸிம்பாப்வே சூறாவளியில் 100க்கும் மேற்பட்டோர் மரணம்

மொசாம்பிக்கிலும் ஸிம்பாப்வேயிலும் கடந்த வெள்ளிக்கிழமையும் சனிக்கிழமையும் தாக்கிய சூறாவளியால் நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். மேலும் பலரை இன்னும் காணவில்லை.

‘இடாய்’ என்று பெயரிடப்பட்டுள்ள அந்தச் சூறாவளி, தெற்கு ஆப்பிரிக்க நாடுகளில் பலத்த காற்றுடன் தாக்கி, திடீர் வெள்ளத்தை ஏற்படுத்தியது.

நாட்டின் கிழக்குப் பகுதியில் 65 பேர் மரணமுற்றதாக ஸிம்பாப்வே அதிகாரிகள் தெரிவித்தனர். பாதிக்கப்பட்ட மத்திய பகுதியில் 48 பேர் மரணமடைந்ததாக மொசாம்பிக் தெரிவித்துள்ளது.

ஸிம்பாப்வேயின் சின்மனிமனி பகுதியே அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது. அந்தப் பகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் இந்த எண்ணிக்கையைத் தெரிவித்தார்.

ஏராளமான வீடுகளும் பாலங்களும் வெள்ளத்தால் இடிந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.

சுமார் 150 முதல் 200 பேர் வரை இன்னும் காணவில்லை என்றும் கூறப்பட்டது.