ஆப்கானிஸ்தானிலிருந்து அகதியாக வந்த அப்துல் அஜீஸ் துப்பாக்கிக்காரனை விரட்டினார்

கையில் ஆயுதமேதும் இல்லை. கிடைத்த கடன் அட்டை கை இயந்திரத்துடன், துப்பாக்கி ஏந்திய பயங்கரவாதியை நோக்கி விரைந்தார் அப்துல் அஜீஸ்.

ஆப்கானிஸ்தானிலிருந்து அகதியாக வந்தவர் அஜீஸ்.

தொழுகைக்காக லின்வூட் பள்ளிவாசலில் கூடியிருந்த ஏழு பேரைக் கொன்றவன் டர்ரன்ட்.

அவன் துப்பாக்கிச் சூடு நடத்திய இரண்டாவது பள்ளிவாசல் அது.

நான்கு மகன்களோடு பள்ளிவாசலுக்குச் சென்ற அஜீஸ், தம் உயிரைப் பணையம் வைத்து பயங்கரவாதியை விரட்டிய துணிகரச்செயலுக்காக நியூசிலாந்தின் இஸ்லாமிய சமூகத்தினர் பாராட்டுத் தெரிவிக்கக் கூடியிருந்தனர்.

கை இயந்திரத்தை வைத்துக்கொண்டு அவன் முன் ஓடியபோது அஜீஸை நோக்கி சுடத் தொடங்கினான் டர்ரன்ட்.

கார்களுக்கு மத்தியில் ஒளிந்துகொண்டு, பின்னர் அந்தப் பயங்கரவாதி தூக்கி எறிந்த பயன்படுத்தப்பட்ட துப்பாக்கியைக் கொண்டு அவனை அந்த இடத்தை விட்டு விரட்டியடித்ததாக அஜீஸ் குறிப்பிட்டுள்ளார்.

48 வயதுடைய அஜீஸ், போலிசார் தன்னைத் துப்பாக்கிக்காரன் என்று தொடக்கத்தில் சந்தேகித்ததாகக் கூறினார். பின்னர் அவர் பள்ளிவாசலுக்குள் அனுமதிக்கப்பட்டார்.

தமது மகன்கள் பாதுகாப்பாக இருந்ததை அவர் உறுதிசெய்தார்.

ஆனால் அவரது நெருங்கிய நண்பர் உட்பட பலர் உயிரிழந்தனர் என்பதை அவரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.