9 வயது நியூசிலாந்து சிறுவன்: “பிறந்தநாள் பரிசு வேண்டாம்; அஞ்சலி செலுத்த மலர் கொத்து வேண்டும்”

கடந்த சனிக்கிழமை நியூசிலாந்தில் வசிக்கும் தர்ஷ் தனது ஒன்பதாவது பிறந்தநாளைக் கொண்டாடினார். பிறந்தநாள் பரிசாக மடிகணினி ஒன்று வேண்டும் என்பதே இவருடைய பல கால ஆசை. ஆனால் அவர் தமது  தந்தை சாமுவேல் சென்னிடம் கேட்டதோ வேறு. 

“பிறந்தநாள் கொண்டாடும் என் பையனுக்கு இன்ப அதிர்ச்சி தரவிரும்பினேன். ஆனால் அவனோ எனக்கு இன்ப அதிர்ச்சியைத் தந்துவிட்டான்,” என்று ஆச்சரியத்துடன் தமது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவு செய்திருந்தார் சாமுவேல்.

“எனக்கு வாங்கவிருந்த மடிகணினி வேண்டாம். அதற்குப் பதிலாக எனக்கு மலர்கொத்து ஒன்றை வாங்கித் தாருங்கள்,” என்றார் தர்ஷ். 

எதற்காக மலர்கொத்து என்று கேட்ட தந்தையிடம், “பள்ளிவாசலுக்குக் கொண்டு சென்று கிறைஸ்ட்சர்ச்சில் மரணமுற்ற மக்களுக்காக பிரார்த்தனை செய்யப்போகிறேன்,” என்று தர்ஷ் கூறியுள்ளார். 

மடிகணினி வாங்குவதற்கு வைத்திருந்த பணத்தை கிறைஸ்ட்சர்ச்சில் தேவையுள்ளோருக்கு நன்கொடையாக வழங்குமாறும் அந்த ஒன்பது வயது பையன் கூறியுள்ளார். 

“அவர்களுக்குத்தான் அந்தப் பணம் தேவை. நான் உங்களுடைய மடிகணினியையே தற்போதைக்குப் பயன்படுத்திக்கொள்கிறேன்,” என்று அந்தப் பிஞ்சு மனம் கூறியுள்ளது.