இந்தோனீசிய வெள்ளம்; 77 பேர் மரணம்

சென்டானி: இந்தோனீசியாவின் பாப்புவா மாகாணத்தில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக மாண்டோர் எண்ணிக்கை 77ஆக உயர்ந் திருப்பதாக அதிகாரிகள் தெரி வித்துள்ளனர். பலரைக் காண வில்லை என்று அதிகாரிகள் கூறினர்.
கடந்த சனிக்கிழமையன்று பெய்த கனமழை காரணமாக வெள்ளம் ஏற்பட்டது. 
மேலும், நிலச்சரிவுகள் ஏற் பட்டதால் நிலைமை மோச மடைந்தது. வெள்ளத்தால் அழிந்த வீட்டின் இடிபாடுகளுக்கு அடியிலிருந்து ஐந்து மாதக் குழந்தையை மீட்புப் பணி யாளர்கள் நேற்று முன்தினம் உயிருடன் மீட்டனர். 
குழந்தையின் தாயார், சகோதரர்களின் சடலங்களை இடிபாடுகளுக்கு இடையே அதிகாரிகள் கண்டெடுத்தனர்.
உயிர்பிழைத்த தந்தையிடம் அந்தக் குழந்தையை அதிகாரிகள் ஒப்படைத்தனர்.
“குழந்தையை மருத்துவ மனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்தோம். குழந்தையின் உடல்நிலை சீராக இருக்கிறது. மனைவி, பிள்ளைகளை இழந்த சோகத்தில் குழந்தையின் தந்தை இருந்தார். குழந்தையை அவரிடம் ஒப்படைத்தபோது அவர் மகிழ்ச்சி அடைந்தார்,” என்று  ஏஎஃப்பி செய்தி நிறுவனத்திடம் பாப்புவா மாகாணத்தின் ராணுவ செய்தித் தொடர்பாளர் முகம்மது ஐடி தெரிவித்தார்.