நெதர்லாந்து துப்பாக்கிச்சூடு; பிடிபட்ட சந்தேக நபர்

நெதர்லாந்தின் உட்ரெட் நகரில் நிகழ்ந்த துப்பாக்கிச்சூட்டின் தொடர்பில் அந்நாட்டு போலிசார், துருக்கியில் பிறந்த சந்தேக நபரைக் கைது செய்துள்ளனர். மூன்று பேர் மடிந்த இந்தச் சம்பவத்தைப் பயங்கரவாதத் தாக்குதல் என்று அந்நாட்டு அதிகாரிகள் வகைப்படுத்தியுள்ளனர்.

சம்பவத்திற்குப் பிறகு, 37 வயது கொக்மென் தனிஸ் தீவிரமாகத் தேடப்பட்டு வந்தார். துப்பாக்கிக்காரன் எனச் சந்தேகிக்கப்படும் அவரின் படத்தை வெளியிட்ட போலிஸ், அவரை அணுக வேண்டாமென பொதுமக்களுக்கு ஆலோசனை விடுத்தது.

இந்தக் கோரச் சம்பவத்தைத் தொடர்ந்து உட்ரெட் நகரிலுள்ள பள்ளிகளும் பள்ளிவாசல்களும் மூடப்பட்டிருந்தன. 

துப்பாக்கிக்காரனின் நோக்கம் குறித்து பல்வேறு கேள்விகளும் வதந்திகளும் நிலவுவதாக நெதர்லாந்தின் பிரதமர் மார்க் ருட்டே குறிப்பிட்டார். ஆனால் இவற்றில் எதுவும் தற்போது உறுதி செய்யப்படவில்லை என்று அவர் கூறினார்.