எத்தியோப்பியா, இந்தோனீசியா விமான விபத்துகளுக்கு போயிங் காரணமா?

எத்தியோப்பியாவில் போயிங் சிஓ 737 மேக்ஸ் விமானம் விழுந்து நொறுங்கிய சம்பவமும் இந்தோனீசியாவில் கடந்தாண்டு அக்டோபரில் நிகழ்ந்த ‘லயன் ஜெட்’ விமான விபத்துக்கும் இடையே ஒற்றுமை இருப்பதாகப் புலனாய்வு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனால் உலகின் ஆகப் பெரிய விமான தயாரிப்பாளரான போயிங் நிறுவனம் மீதான நெருக்குதல் அதிகரித்துள்ளது. 

சுமார் எட்டு நாட்களுக்கு முன்னர் எத்தியோப்பிய ஏர்லைன்ஸ் விமானம் விழுந்து நொறுங்கிய சம்பவத்தில் 157 பேர் உயிரிழந்தனர். இதனால் போயிங்கின் ‘மார்க்கி மேக்ஸ்’ விமானங்கள் பறப்பதற்கான உலகளாவிய தடை விதிக்கப்பட்டது. லயன் ஜெட்’ விமான விபத்தில் 189 பேர் மரணம் அடைந்தனர்.

விமானத்தின் இறக்கைக்கும் காற்றோட்டத்திற்கும் இடையிலான இடைவெளி இரண்டு சம்பவங்களிலும் கிட்டத்தட்ட ஒரே மாதிரி இருந்ததாகத் தகவல்கள் வெளிவந்துள்ளன.

இவ்விரு சம்பவங்களிலும் ஒற்றுமை தெரிந்தாலும் விசாரணை ஆரம்பகட்டத்தில் இன்னும் இருப்பதாக எத்தியோப்பிய போக்குவரத்து அமைச்சு, பிரான்சின் பிஇஏ விபத்து ஆணையம், அமெரிக்காவின் மத்திய விமானத்துறை நிர்வாகம் ஆகியவை தெரிவித்துள்ளன.

சம்பவம் தொடர்பான இரண்டு விமானங்களுமே தரையிலிருந்து மேலே ஏறிய சில நிமிடங்களிலேயே நொறுங்கி விழுந்தன. அந்நேரத்தில் விமானத்தைக் கட்டுப்படுத்துவதில் பிரச்சினைகளை எதிர்நோக்கியதாக விமானிகள் தெரிவித்திருந்தனர்.