நியூசிலாந்து பிரதமர்: “இருட்டுக்காலத்தில் இருக்கிறோம்”

துப்பாக்கிக்காரன் ஒருவனால் கொலை செய்யப்பட்டவர்களின் உற்றார் உறவினர்களின் தைரியத்தை நியூசிலாந்து பிரதமர் ஜெசிண்டா ஆர்டன் பாராட்டியுள்ளார். இருட்டுக்காலமான இந்தக் காலக்கட்டத்தில் முஸ்லிம்களுடன் நியூசிலாந்து துணை நிற்பதாக அவர் கூறினார்.

நியூசிலாந்தின் கிறைஸ்ட்சர்ச் நகரிலுள்ள அல் நூர் பள்ளிவாசலில் கடந்த வெள்ளிக்கிழமை நிகழ்ந்த துப்பாக்கிச்சூட்டில் 50 பேர் கொல்லப்பட்டதை அடுத்து முதற்கட்ட இறுதிச் சடங்குகளுக்கான ஆயத்த பணிகள் நடந்து வருகின்றன. தாக்குதலின்போது உயிரிழந்த ஒருவரைப் பற்றி திருவாட்டி ஆர்டன் குறிப்பிட்டுப் பேசினார்.

71 வயது ஹட்டி முகம்மது தவுத் நபி, பள்ளிவாசலின் கதவைத் திறந்தபோது துப்பாக்கிக்காரனை “வணக்கம் சகோதரரே” என்று வரவேற்றதாகவும் அதுவே அவரது கடைசி வார்த்தைகளாக இருந்ததாகவும் திருவாட்டி ஆர்டன் தெரிவித்தார்.

“நுழைவாயிலுக்கு வெளியே அவருக்காகக் காத்திருந்த ஆபத்தைப் பற்றி அவர் அப்போது அறியவில்லை. ஆயினும் அவர் கொடுத்த வரவேற்பு, அவரது சமூகத்தின் பரந்த மனப்பான்மையையும் பரிவையும் காட்டியது,” என்று அவர் உணர்ச்சி ததும்ப ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்தில் கூறினார்.

துப்பாக்கிக்காரனின் பெயரைத் தாம் கூறப்போவதில்லை என்று சூளுரைத்த திருவாட்டி ஆர்டன், அவர் நியூசிலாந்தின் சட்ட நடவடிக்கைகளை முழுமையாக எதிர்கொள்ள வேண்டிவரும் என்றும் கூறினார்.