நியூசிலாந்து துப்பாக்கிச்சூடு; உயிரிழந்தோரைப் புதைக்கும் பணிகள் தொடக்கம்

நியூசிலாந்தின் கிறைஸ்ட்சர்ச் நகரில் பள்ளிவாசலில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூடு சம்பவத்தால் உயிர் இழந்தவர்களில் இருவரின் நல்லுடல்கள், அந்நகரின் ‘மெமோரியல் பார்க்’ இடுகாட்டுக்குப் புதன்கிழமை (20 மார்ச்) காலை கொண்டு செல்லப்பட்டன. தாக்குதலில் உயிரிழந்த 50 பேரில் இந்த இருவரின் நல்லுடல்கள் முதலில் அடக்கம் செய்யப்படும்.

மாண்ட இந்த இருவர் தந்தையும் மகனும் ஆவர். அவர்களுக்கு இறுதி அஞ்சலி செலுத்த நூற்றுக்கணக்கானோர் இடுகாட்டில் திரண்டனர். அவர்களுக்குப் பாதுகாப்பு அளிப்பதற்காக போலிஸ் அதிகாரிகள் பலர் ஆயுதங்களோடு சுற்றி நின்றனர்.

தாக்குதலை நடத்திய துப்பாக்கிக்காரனான 28 வயது ஆஸ்திரேலியர் பிரெண்டன் டாரன்ட் மீது கொலைக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது. ஏப்ரல் 5ஆம் தேதி அவர் நீதிமன்றத்திற்குக் கொண்டு செல்லப்படுவார். அப்போது அவர் மீது மேலும் குற்றச்சாட்டுகள் சுமத்தப்படும் என்று அதிகாரிகள் கூறினர்.