போயிங் விமானங்களுக்கு ஏற்படும் அசம்பாவிதங்களுக்குப் பின்னணியிலுள்ள மர்மம் என்ன?

இந்தோனீசியாவில் லயன் ஏர் விமானம் ஒன்றைக் கட்டுப்படுத்த அதன் விமானிகள் திணறிக்கொண்டிருந்த வேளையில் விமானி அறையில் இருந்த பணியில் இல்லாத விமானி ஒருவர் உதவி செய்ததாகத் தகவல்கள் கூறுகின்றன.

பிரச்சினையைச் சரியாக அடையாளம் கண்ட அந்த விமானி, கோளாறுகளைக் கொண்ட விமானக் கட்டுப்பாட்டு அமைப்பினைச் செயல் இழக்கச் செய்வது எப்படி என்பது குறித்த வழிகாட்டுதலை மற்ற விமானிகளுக்கு உரிய நேரத்தில் அளித்தார். இதனால் அந்த விமானம் பாதுகாப்பாகத் தரையிறங்கியதாக விசாரணை நடத்திய இந்தோனீசியக் குழு தெரிவித்தது.

ஆயினும், மறுநாள் வேறொரு விமானிக் குழு இதே பிரச்சினையை எதிர்நோக்கியதாகவும் இதன் விளைவாக விமானம் ஜாவா கடலுக்குள் விழுந்ததாகவும் விசாரணைக் குழு கூறியது. சம்பவத்தின்போது விமானத்தில் இருந்த 189 பேரும் உயிரிழந்தனர். இந்த விவரம், ‘போயிங் 737 மேக்ஸ் 8’ விமானங்கள் பலவற்றுக்கு நேரும் அசம்பாவிதங்களின் பின்னணியிலுள்ள மர்மத்தை வெளிச்சத்திற்குக் கொண்டு வர உதவலாம் எனக் கருதப்படுகிறது.