சுடச் சுடச் செய்திகள்

ஹாங்காங்: வழக்க நிலைக்குத் திரும்பியுள்ள எம்டிஆர் ரயில் சேவை

ஹாங்காங்கின் ‘எம்டிஆர்’ பெருவிரைவு ரயில் பாதையில் அனைத்துச் சேவைகளும் வழக்க நிலைக்குத் திரும்பியுள்ளதாக ‘எம்டிஆர்’ ரயில் நிறுவனம் புதன்கிழமை காலை (மார்ச் 20) தெரிவித்துள்ளது. நேற்று முன்தினம் பின்னிரவு நேரத்தில், புதிய சமிக்ஞை முறை சோதனை செய்யப்பட்டபோது இரண்டு ரயில்கள் ஒன்றோடு ஒன்று மோதின. இதனால் காயமடைந்த அவ்விரு ரயில்களின் ஓட்டுநர்களும் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டிருந்தனர். ரயில்களில் அப்போது பயணிகள் இல்லை.

சம்பவத்தை ஆராய விசாரணைக் குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளதாக ‘எம்டிஆர்’ நிறுவனத்தின் தலைவர் ஃப்ரெடரிக் மா தெரிவித்தார். இந்தக் குழு சம்பவத்தைத் தீவிரமாக ஆராயும் என்று திரு மா உறுதி அளித்தார். மற்ற அனைத்து அம்சங்களைக் காட்டிலும் பாதுகாப்புக்கு ஆக அதிக முக்கியத்துவம் தரப்படும் என்றார் அவர். 

ரயில் மோதல் தொடர்பான தகவல்களை ஆராய்ந்து முடிக்க இரண்டு முதல் மூன்று மாதங்கள் வரை ஆகலாம் என்று தெரிவிக்கப்பட்டது. ஆயினும், சமிக்ஞை முறையைத் தயாரித்த ‘தாலஸ்’ நிறுவனம் முதற்கட்ட அறிக்கை ஒன்றை வெளியிடும் எனக் கூறப்படுகிறது. நாற்பது ஆண்டுகளாகச் செயல்பட்டு வந்த ‘எம்டிஆர்’ ரயில் சேவையில் இத்தகைய சம்பவம் நிகழ்வது இதுவே முதல்முறை.

ரயில் அமைப்புக்கான புதிய சமிக்ஞை முறையின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும் வரை ஹாங்காங்கின் அரசாங்கம் அதன் செயல்பாட்டை அனுமதிக்காது என்று ஹாங்காங்கின் தலைமை நிர்வாகி கெர்ரி லாம் தெரிவித்தார்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon