இலங்கை போர்க்குற்ற விசாரணையில் வெளிநாட்டு நீதிபதிகளை சேர்க்க கோரிக்கை

இலங்கையில் நிகழ்ந்த போர்க்குற்றங்களை விசாரிக்கும் நீதிமன்றத்தில் வெளிநாடுகளைச் சேர்ந்த நீதிபதிகள் சேரவேண்டும் என்று அந்நாட்டின் தமிழ் தேசிய கூட்டமைப்பு கேட்டுள்ளது. 

தமிழர்களுக்கும் சிங்களவர்களுக்கும் இடையிலான உள்நாட்டுப்போரில் 2009ஆம் ஆண்டில் குறைந்தது 40,000 தமிழர்களை இலங்கை ராணுவம் கொன்றதாகக் குற்றஞ்சாட்டப்படுகிறது. இதுவரை, போர்க்குற்றங்களுக்காக எவர் மீதும் இலங்கையில் வழக்கு தொடரப்படவில்லை. இதில் எந்த முன்னேற்றமும் ஏற்படாத நிலையில் ஜெனீவாவிலுள்ள ஐக்கிய நாடுகள் அமைப்பின் மனித உரிமை மன்றம், விசாரணையை நம்பகமான முறையில் நடத்த இலங்கை அரசாங்கத்திற்கு இன்னும் இரண்டு ஆண்டுகள் கொடுத்துள்ளது.

விசாரணையில் ஈடுபட வெளிநாட்டு நீதிபதிகளை இலங்கையின் அரசமைப்புச் சட்டம் அனுமதிக்கவில்லை என்று  இலங்கையின் வெளியுறவு அமைச்சர் திலக் மரபன ஜெனீவாவில் தெரிவித்தார். இதனால் கடும் அதிருப்தி அடைந்த தமிழ் தேசிய கூட்டமைப்பு, இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்திடம் புகார் செய்யப் போவதாகக் கூறியுள்ளது.

இந்த விவகாரத்தை இலங்கை சரியான முறையில் அணுகத் தவறினால் அந்நாட்டில் மீண்டும் பூசல் ஏற்படலாம் என்று ஐ.நாவின் மனித உரிமைப் பிரிவின் தலைவர் மிஷல் பாக்லெட் தெரிவித்தார்.