மொஸாம்பிக் சூறாவளி; உயிரிழந்தோரின் எண்ணிக்கை அதிகரிப்பு

மொஸாம்பிக்கை உலுக்கிய சூறாவளியில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 417லிருந்து 446க்கு அதிகரித்திருப்பதாக அந்நாட்டின் அரசாங்கம் தெரிவித்துள்ளது. அந்நாட்டினைக் கடுமையாக உருக்குலைத்த ‘இடாய்’ சூறாவளியால் 531,000 பேர் பாதிக்கப்பட்டதாகவும் 110,000 பேர் நிவாரண முகாம்களில் தங்கியிருப்பதாகவும் நில, சுற்றுப்புற அமைச்சர் கெல்சோ கொர்ரியா தெரிவித்தார்.

ஸிம்பாப்வேயில் 259 பேர் வரை மாண்டிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. மலாவியில் 56 பேர் கனத்த மழையில் மாண்டனர். சிலர், தங்கள் கரங்களால் சிதைவுகளைத் தோண்டி தங்கள் அன்புக்குரியவர்களைத் தேடி வருவதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் காலரா, மலேரியா உள்ளிட்ட தொற்றுநோய்கள் பரவும் அபாயம் அதிகரித்துள்ளது. “இந்தச் சூழ்நிலையில் இவை தவிர்க்க முடியாதவை. எனவே அரசாங்கம் காலரா சிகிச்சை நிலையம் ஒன்றைத் திறந்திருக்கிறது,” என்றார் கொர்ரியா.

இதற்காக 6.5 மில்லியன் வெள்ளி நிதி உதவி வழங்க அமெரிக்கா தயாராக இருப்பதாகத் தெரிவித்தது.