கிறைஸ்ட்சர்ச் பள்ளிவாசலில் இருந்தவர்களைக் கொன்ற துப்பாக்கிக்காரன் எடுத்த நேரலை காணொளியை அனுமதித்திருந்த யூடியூப், ஃபேஸ்புக் ஆகிய சமூக ஊடகத்தளங்களுக்கு எதிராக வழக்கு தொடரப்போவதாக பிரான்சிலுள்ள முஸ்லிம் அமைப்பு ஒன்று தெரிவித்தது.
இந்தக் காணொளி பயங்கரவாதத்தை ஊக்குவிப்பதாகவும் மனிதர்களின் மதிப்புக்குப் பங்கம் விளைவிப்பதாகவும் 'சிஎஃப்சிஎம்' எனப்படும் பிரஞ்சு இஸ்லாமிய சமய மன்றம் தெரிவித்துள்ளது.
இது குறித்து யூடியூப், ஃபேஸ்புக் ஆகியவை இன்னமும் கருத்துரைக்கவில்லை.
மார்ச் 15ஆம் தேதியன்று நியூசிலாந்திலுள்ள இரு பள்ளிவாசல்களில் நிகழ்ந்த துப்பாக்கிச்சூட்டில் 50 பேர் மாண்டனர். துப்பாக்கிக்காரன் தனது கைப்பேசி கேமராவுடன் தனது செயலை ஃபேஸ்புக் நேரலையாகக் காணொளி எடுத்தான். அந்தக் காணொளி 17 நிமிடங்கள் நீடித்தன.
நேரலை காணொளியின் பிரதிகளை அகற்ற மும்முரமாகச் செயல்பட்டதாக ஃபேஸ்புக் தெரிவித்தது. ஆயினும், தாக்குதல் நடந்து சில மணி நேரங்களுக்குப் பிறகு, ஃபேஸ்புக், டுவிட்டர், ஆல்ஃபாபெட் இன்கார்பரேட்டட் ஆகியவற்றின் தளங்களில் அந்தக் காணொளி இன்னமும் காணப்பட்டது.
காணொளி குறித்து ஃபேஸ்புக்கும் ஆல்ஃபாபெட்டும் குறைகூறல்களுக்கு உள்ளாயின.

