தவறான இடத்தில் தரையிறங்கிய விமானம்

தவறான இடத்தில் தரையிறங்கிய விமானம்

1 mins read
ac73e740-c2d0-489d-8016-f11983c31f9a
-

லண்டனிலிருந்து ஜெர்மனியின் டசல்டோர்ஃப் நகருக்குச் செல்ல வேண்டிய பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானம், ஸ்காட்லாந்தின் எடின்பர்க் நகரில் தரை இறங்கியதால் பயணிகள் வியப்பில் மூழ்கினர்.

எடின்பர்க் நகருக்குப் பயணிகளை வரவேற்பதாக விமானி அறிவித்த வரையில் இவ்வாறு நடந்ததாகப் பயணிகள் எவருக்கும் தெரியவில்லை. விமானிக்குத் தவறான பயணப் பாதை கொடுக்கப்பட்டதால் இவ்வாறு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.

விமானம் எடின்பர்க்கில் தரையிறங்கிவிட்டதாக விமானி அறிவித்தபோது அவர் விளையாட்டுக்காக அவ்வாறு செய்திருந்தார் என்று பயணிகள் அனைவரும் ஆரம்பத்தில் நினைத்திருந்ததாக விமானத்தில் இருந்த 24 வயது பெண் சோஃபி குக் தெரிவித்தார்.

"ஆனால் விமானி, இது எப்படி நடந்தது என்று தனக்குத் தெரியவில்லை என்று கூறினார். இதுபோன்ற ஒரு சம்பவம் இதற்கு முன்னர் நடந்ததே இல்லை என்றும் அவர் சொன்னார். இதனை எப்படி சரிசெய்வது என்பது குறித்தும் விமானப் பணியாளர்கள் யோசித்து வருவதாக விமானி உறுதியளித்தார்," என்று குமாரி குக் கூறினார்.

நடந்தது குறித்து பயணிகளிடம் மன்னிப்பு கேட்பதாகவும் அவர்களுக்காக மாற்று பயண ஏற்பாடுகள் செய்யப்பட்டிருப்பதாகவும் பிரிட்டிஷ் ஏர்வேஸ் தெரிவித்தது.