தமது அரசாங்கம் குறித்து அதிருப்தியாக இருப்பதாக நூருல் இசா கூறியதை அறிந்து வருத்தமடைவதாக மலேசியப் பிரதமர் மகாதீர் முகம்மது தெரிவித்திருக்கிறார். சர்வாதிகாரியான டாக்டர் மகாதீருடன் பணியாற்றவேண்டிய நிலையில் இருப்பதால் மனமுடைந்திருப்பதாக முன்னைய துணைப்பிரதமர் அன்வார் இப்ராஹிமின் மகளான நூருல் இசா 'ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்' பத்திரிகையிடம் தெரிவித்ததை அடுத்து டாக்டர் மகாதீரின் கருத்துகள் வெளிவந்தன.
திருவாட்டி நூருல் இசா பற்றி கேட்ட செய்தியாளருக்குப் பதிலளித்த டாக்டர் மகாதீர், "பலர் வருத்தத்தில் இருப்பது இருக்கட்டும். அவர்கள் மீது எனக்கும் வருத்தம்," என்று கூறினார்.
1998ஆம் ஆண்டு தனது தந்தை சிறையில் அடைக்கப்பட்டது குறித்து இன்னமும் வருத்தத்தில் இருப்பதாகவும் திருவாட்டி நூருல் இசா 'ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்' பேட்டியில் கூறினார். ஆயினும் திருவாட்டி நூருல் இசாவின் கருத்துகளில் முதிர்ச்சியும் நியாயமும் இல்லை என்றும் அவர் உணர்ச்சிவசப்பட்டு இவ்வாறு கூறியுள்ளதாகவும் டாக்டர் மகாதீரின் அரசியல் செயலாளர் அபு பக்கார் யாஹ்யா குறைகூறினார்.
டாக்டர் மகாதீரைப் பற்றிய எதிர்மறை கருத்துகளைத் திருவாட்டி நூருல் இசா, குறிப்பாக சிங்கப்பூர் ஊடகங்களிடம், சொல்லியிருக்கக் கூடாது என்றும் அவர் கூறினார்.

