மலேசியப் பிரதமர் மகாதீர் முகம்மதை மட்டும் தனது மகள் குறைகூறவில்லை என்றும் பக்கத்தான் ஹரப்பானைச் சேர்ந்த மற்ற தலைவர்களையும் விமர்சித்திருப்பதாகவும் கெஅடிலான் ராக்யாட் கட்சியின் தலைவர் அன்வார் இப்ராஹிம் தெரிவித்திருக்கிறார்.
"இது டாக்டர் மகாதீரை மட்டும் குறிவைத்து சொல்லப்பட்டதல்ல. ஒருவரையொருவர் குறைகூறும் மற்ற தலைவர்களையும் பற்றியதுதான்," என்று திரு அன்வார் கூறியதாக 'த மலாய் மெயில்' நாளிதழ் குறிப்பிட்டுள்ளது.
சர்வாதிகாரியான டாக்டர் மகாதீருடன் பணியாற்றவேண்டிய நிலையில் இருப்பதால் மனமுடைந்திருப்பதாகத் திரு அன்வாரின் மகள் நூருல் இசா, 'ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்' பத்திரிகையிடம் கூறியதால் புதிய சர்ச்சை ஏற்பட்டுள்ளது. இது பற்றி செய்தியாளர் ஒருவர் டாக்டர் மகாதீரிடம் நேற்று கேட்டபோது அவர், "பலர் வருத்தத்தில் இருப்பது இருக்கட்டும். அவர்கள் மீது எனக்கும் வருத்தம்," என்று பதிலளித்தார்.
நாடாளுமன்ற வரவேற்பு அறையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய திரு அன்வார், டாக்டர் மகாதீரின் தலைமைத்துவத்தைத் தாமும் தமது குடும்பமும் ஆதரிப்பதாகத் தெரிவித்தார். டாக்டர் மகாதீர் திறம்பட ஆட்சி செய்வதற்கான சூழலை ஏற்படுத்தித் தருவதாக அவர் கூறினார்.
அதேவேளையில் திரு அன்வார் தமது மகளைத் தற்காத்துப் பேசினார்.
தலைமைத்துவத்திற்கு சூழலை ஏற்படுத்தித் தந்தாலும் மாற்றுக்கருத்துகளோ விமர்சனங்களோ இருக்கக்கூடாது என்பதில்லை என்று திரு அன்வார் கூறினார்.
டாக்டர் மகாதீரை முன்னாள் சர்வாதிகாரி என திருவாட்டி நூருல் இஸா வர்ணித்ததை ஊடகங்கள் மிகையாக கவனித்திருப்பதாக திரு அன்வார் தெரிவத்தார்.
"எப்போதோ பேட்டி ஒன்றில் சொல்லப்பட்ட சில வாக்கியங்களை சிங்கப்பூரின் 'ஸ்டரெய்ட்ஸ் டைம்ஸ்' பெரிய விஷயமாகக் காட்டியிருக்கிறது. இது குறித்து நாம் ஏன் வாக்குவாதத்தில் ஈடுபடவேண்டும்?" என்று திரு அன்வார் கூறியதாக 'த மல்ய் மெயில்' தெரிவித்தது.

