நூருல் இசாவின் கருத்துகளை மதிக்கக் கோரிக்கை

நூருல் இசாவின் கருத்துகளை மதிக்கக் கோரிக்கை

2 mins read
f6fba67e-3223-4ba9-a343-8c072a8e57a6
-

கெஅடிலான் ராக்யாட் கட்சியின் தலைவரும் மலேசியாவின் முன்னைய துணைப் பிரதமருமான அன்வார் இப்ராஹிமின் மகள் நூருல் இசாவின் கருத்துகள் மதிக்கப்படவேண்டும் என்றும் ஏளனத்திற்கு உள்ளாகக்கூடாது என்றும் திரு அன்வாரின் அரசியல் செயலாளர் தெரிவித்திருக்கிறார். 'பிஏசி' என்ற பொதுக் கணக்குகள் குழுவிலிருந்து திருவாட்டி நூருல் இசா விலகியது, அரசாங்கம் மீதான வருத்தத்தை அவர் வெளிப்படுத்தியது ஆகியவற்றுக்கான பின்னணியை மக்கள் சரியாகப் புரிந்துகொள்ளவேண்டும் என்று திரு ஃபர்ஹஷ் வாஃபா சல்வடோர் கூறினார்.

"மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதியான அவரது உணர்ச்சிகளை பக்கத்தான் ஹரப்பான் தலைவர்கள், குறிப்பாக கெஅடிலான் ராக்யாட் தலைவர்கள் உதாசினப்படுத்தக் கூடாது," என்று அவர் அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டார்.

மார்ச் 12 ஆம் தேதி ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் பத்திரிகைக்குப் பேட்டியளித்த திருவாட்டி நூருல் இசா, கடந்த ஆண்டு பலவற்றைக் கற்றுக்கொண்டதாகத் தெரிவித்தார். ஆயினும், தான் மனமுடைந்திருப்பதாகவும் அவர் கூறினார். "எங்களது வாழ்க்கையிலும் நாட்டின் அமைப்பின் மீதும் இவ்வளவு பாதிப்பை ஏற்படுத்திய முன்னைய சர்வாதிகாரி ஒருவருடன் பணியாற்றுவது சுலபமல்ல," என்று திருவாட்டி நூருல் இசா மலேசியப் பிரதமர் மகாதீர் முகம்மதைப் பற்றி அந்தப் பேட்டியின்போது கூறினார். இதனால் அவருக்கு எதிரான குறைகூறல்கள் மலேசிய அரசியல் வட்டாரங்களில் ஆங்காங்கே வெடிக்க ஆரம்பித்தன.

திருவாட்டி நூருல் இசாவின் கருத்துகளைப் பற்றி கேட்ட செய்தியாளர் ஒருவரிடம், "பலர் வருத்தத்தில் இருப்பது இருக்கட்டும். நானும் அவர்கள் மீது வருத்தமடைகிறேன்," என்று டாக்டர் மகாதீர் பதிலளித்தார். பொருளியல் விவகார அமைச்சர் அஸ்மின் அலி, டாக்டர் மகாதீரின் அரசியல் செயலாளர் அபு பக்கார் யாஹ்யா, கெஅடிலான் ராக்யாட் துணைத்தலைவர் என். சுரேந்திரன் ஆகியோர் திருவாட்டி நூருல் இசாவை விமர்சித்தனர். ஆயினும் திரு அன்வார், தமது மகளைத் தற்காத்துப் பேசினார். டாக்டர் மகாதீரின் தலைமைத்துவத்தை ஆதரிப்பதாகவும் அவர் கூறினார்.