ஸ்பெயினின் மட்ரிட் நகரிலுள்ள வடகொரிய தூதரகத்திற்குள் சென்று அமளி ஏற்படுத்திய குழுவினர் தங்கள் அடையாளத்தைச் செவ்வாய்க்கிழமை (மார்ச் 26) வெளிப்படுத்தினர். =
'ஃப்ரீ ஜோசியோன்' என்ற அந்தக் குழு, வடகொரியாவின் தலைவர் கிம் ஜோன் உன்னின் ஆட்சிக்கவிழ்ப்புக்காகக் குரல்கொடுத்து வருகிறது. தூதரகத்திலிருந்து பயனுள்ள தகவல்கள் சிலவற்றைப் பெற்றுள்ளதாகவும் அதனை அமெரிக்காவின் மத்தியப் புலனாய்வுப் பிரிவிடம் பகிர்ந்திருப்பதாகவும் அந்தக் குழு தெரிவித்தது.
இந்தக் குழுவைச் சேர்ந்தவர்கள் அமெரிக்காவுக்குத் தப்பியோடியுள்ளதாக ஸ்பானிய அதிகாரிகள் நம்புவதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்தது. அவர்களை ஸ்பெயினுக்குத் திரும்ப அனுப்புவதற்கான வேண்டுகோளை அந்நாடு அமெரிக்காவிடம் விடுத்துள்ளது. அத்துமீறிய நுழைவு, மிரட்டுதல், கொள்ளையடித்தல் ஆகியவற்றின்பேரில் இக்குழுவினர் மீது குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளதாக ஸ்பானிய நீதிமன்றம் தெரிவித்தது. குற்றங்கள் நிரூபிக்கப்பட்டால் அவர்கள் 38 ஆண்டுகள் வரையிலான சிறைத்தண்டனையை எதிர்நோக்கலாம்.

