முதன்முறையாக எச்ஐவி நோயாளி ஒருவரின் சிறுநீரகம் அறுவை சிகிச்சை வழியாக மற்றொருவருக்கு மாற்றப்பட்டுள்ளது. அமெரிக்காவின் பல்டிமோர் நகரில் இந்தச் சிகிச்சை வெற்றிகரமாக நிறைவேறியதாக மருத்துவர்கள் வியாழக்கிழமை (மார்ச் 28) அறிவித்தனர்.
திங்கட்கிழமை செய்யப்பட்ட இந்தச் சிகிச்சையைப்போல இதுவரை எந்த ஒரு சிகிச்சையும் செய்யப்படவில்லை என்று ஜான் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மருத்துவர்கள் தெரிவித்தனர்.
சிறுநீரகத்தைத் தானம் செய்த 35 வயது நினா மார்டினெஸ், தாம் நலமாக இருப்பதாகத் தெரிவித்தார். எச்ஐவி நோயாளி ஒருவருக்கு இந்தத் தானம் செய்யப்பட்டது. தனது நண்பர் ஒருவருக்கு அந்தச் சிறுநீரகத்தைக் கொடுக்க விரும்பினார் மார்டினெஸ். ஆனால் அதற்கு முன்னதாக அந்த நண்பர் இறந்துவிட்டதாகத் தெரிவித்தார்.
எச்ஐவி நோயாளிக்கு ஒரே ஒரு சிறுநீரகம் இருப்பது ஆபத்து என்று மருத்துவர்கள் முன்பு நம்பியிருந்தனர். ஆயினும், எச்ஐவியைச் சமாளிப்பதற்கான மேம்பட்ட சிகிச்சை முறைகளின்மீது அறிவியல் சமூகம் கொண்டுள்ள நம்பிக்கையை அறுவை சிகிச்சையின் முடிவு பிரதிபலிக்கிறது.

