'ஜோ லோ'வின் தந்தையின் ஏழு வங்கிக் கணக்குகளை முடக்க மலேசிய அரசாங்கம் முயற்சி

'ஜோ லோ'வின் தந்தையின் ஏழு வங்கிக் கணக்குகளை முடக்க மலேசிய அரசாங்கம் முயற்சி

1 mins read
bd871b65-2b76-478c-a346-09daa2ad323c
-

அதிகாரிகளால் தேடப்பட்டு வரும் நிதியாளர் 'ஜோ லோ' எனப்படும் லோ தெக் ஜோவின் தந்தைக்குச் சொந்தமான ஏழு வங்கிக் கணக்குகளை முடக்க மலேசிய அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாக 'தி எட்ஜ் மார்க்கெட்ஸ்' என்ற நிதி, வர்த்தகப் பத்திரிகை தெரிவித்துள்ளது. அந்த வங்கிக் கணக்குகளின் மொத்த மதிப்பு 48 மில்லியன் ரிங்கிட். 1எம்டிபி நிதியத்திலிருந்து இந்தப் பணம் பெறப்பட்டுள்ளதாக நம்பப்படுகிறது.

ஏழு வங்கிக் கணக்குகளில் மூன்று நிலை வைப்புக் கணக்குகள் என்று 'தி எட்ஜ் மார்க்கெட்ஸ்' பத்திரிகையிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கையில் அரசியல் உள்நோக்கம் இருப்பதாக ஜோ லோ சாடியுள்ளார். பிரதமர் மகாதீர் முகம்மது இதன் மூலம் அரசியல் ஆதாயம் தேடுவதாகவும் அவர் சொன்னார்.

"மகாதீரின் முன்னைய அரசாங்கம் பதவியிலிருந்த காலகட்டத்தில், லோ குடும்பச் சொத்து இருபது ஆண்டுகளுக்கு முன்னரே நிறுவப்பட்டிருந்தது. 1எம்டிபி நிறுவனத்தின் உருவாக்கத்திற்கு வெகு காலத்திற்கு முன்னரே இந்தச் சொத்து இருந்தது," என்று லோவின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

1எம்டிபி பணத்தை மோசடி செய்ததாக லோ மீதும் அவரது தந்தை மீதும், அவர்கள் இல்லாமலேயே, புத்ராஜெயா அமர்வு நீதிமன்றத்தில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் குற்றம் சாட்டப்பட்டது. கள்ளப் பணத்தை நல்ல பணமாக்கியது தொடர்பான எட்டு குற்றச்சாட்டுகளை லோ எதிர்நோக்குகிறார். அவரது தந்தை மீது ஒரு குற்றச்சாட்டு உள்ளது.