மெக்சிகோவுடனான எல்லைப் பகுதியை மூடப்போவதாக அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் மீண்டும் மிரட்டியுள்ளார். அமெரிக்காவுக்குள் நுழையும் கள்ளக்குடியேறிகளின் தாய்நாடுகளான மத்திய அமெரிக்கக் கண்ட நாடுகள் இந்தப் பிரச்சினையைத் தடுக்க போதிய நடவடிக்கை எடுக்கவில்லை என்று குற்றம் சாட்டிய திரு டிரம்ப், அந்நாடுகளுக்கு மானியங்கள் கொடுப்பதை அமெரிக்கா நிறுத்தும் என்று நேற்று முன்தினம் அறிவித்ததை அடுத்து இவ்வாறு கூறியுள்ளார்.
மெக்சிகோ அதிகாரிகள் இந்தப் பிரச்சினை குறித்து நடவடிக்கை எடுக்கத் தவறினால் எல்லைப் பகுதியை இந்த வாரத்திற்குள் மூடுவதற்கான சாத்தியம் அதிகம் என்று திரு டிரம்ப் தெரிவித்தார். இவ்வாறு கள்ளக்குடியேறிகள் அமெரிக்காவுக்குள் நுழைய அவர்களது சொந்த நாட்டின் அரசாங்கங்கள் உதவி வருவதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.
ஆயினும், அமெரிக்க-மெக்சிகோ எல்லைப்பகுதி மூடப்பட்டால், இரு நாடுகளுக்கு இடையிலும் கோடிக்கணக்கான மக்களின் சட்ட அனுமதிபெற்ற பயணங்களும், மக்களும், இரு நாட்டு வர்த்தகமும் பாதிக்கப்படும் என்றும் கவனிப்பாளர்கள் கூறுகின்றனர்.
நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை வகித்துள்ள ஜனநாயகக் கட்சியினரின் ஆதரவு இல்லாத நிலையில் கள்ளக் குடியேறிகளால் ஏற்படும் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்குத் திரு டிரம்ப்புக்கு அதிக வழிகள் இல்லை என்று வெள்ளை மாளிகைளின் தற்காலிக ஊழியர் அணித்தலைவர் (Chief of Staff ) மிக் மல்வெனி தெரிவித்தார்.
"இந்தக் கட்டுப்பாடுகளை எதிர்நோக்கும் அதிபர், தன்னால் முடிந்த அனைத்தையும் செய்வார். எல்லைப் பகுதியை மூடவேண்டும் என்ற நிர்ப்பந்தம் ஏற்பட்டால் அதையே அவர் செய்வார்," என்றார் திரு மல்வெனி.

