அமெரிக்காவின் முன்னைய துணை அதிபர் ஜோ பைடன் மீது மற்றொரு பெண் பாலியல் குற்றச்சாட்டைச் சுமத்தியதை அடுத்து, அமெரிக்க அதிபர் டிரம்ப் அவரைக் கேலி செய்திருக்கிறார்.
2016ஆம் ஆண்டில் அதிபர் தேர்தல் பிரசாரத்தின்போது இதுபோன்ற குற்றச்சாட்டுகளைத் திரு டிரம்ப் எதிர்நோக்கினார். அப்போது திரு பைடன் அவருக்கு எதிராகக் கடுமையாகக் குரல்கொடுத்தார்.
2020ஆம் ஆண்டில் நிகழவிருக்கும் அதிபர் தேர்தலில் போட்டியிடுவதா என்று திரு பைடன் யோசித்துக்கொண்டிருக்கும் வேளையில் இந்தக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இவற்றை மறுத்துள்ள திரு பைடன், தான் தகாத முறையில் நடந்துகொண்டதாக நம்பவில்லை என்று கூறினார். மேலும், அவர் பாசத்தால் மக்களை அடிக்கடி கட்டி அணைப்பதாக அவரது ஆதரவாளர்கள் கூறுகின்றனர்.
ஜோ பைடனிடம் "இதுதான் உலகம், வருக வருக!" எனக் கூற விரும்பியதாகத் திரு டிரம்ப், குடியரசு கட்சிக்கான நிதித்திரட்டு விருந்து நிகழ்ச்சியில் தெரிவித்தார். இதுபோல மேலும் பல கேலியான கருத்துகளைத் திரு டிரம்ப் விருந்து நிகழ்ச்சியில் கூறினார்.

