இரண்டு முன்னாள் அமைச்சர்களைக் கட்சியிலிருந்து வெளியேற்றிய கனடியப் பிரதமர்

இரண்டு முன்னாள் அமைச்சர்களைக் கட்சியிலிருந்து வெளியேற்றிய கனடியப் பிரதமர்

1 mins read
fb3a3790-06d2-481f-9a28-5a6e4ded9709
-

அரசியல் சர்ச்சைக்கு மத்தியில் கனடியப் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, இரண்டு முன்னாள் அமைச்சர்களைத் தமது கட்சியிலிருந்து வெளியேற்றியுள்ளார். முன்னைய நீதித்துறை அமைச்சர் ஜோடி வில்சன்-ரேபோலிட், முன்னைய நிதித்துறை அமைச்சர் ஜேன் ஃபில்பொட் ஆகியோரை இனியும் தம்மால் நம்ப இயலாது என்று திரு ட்ரூடோ கூறினார்.

திருவாட்டி ஜோடி வில்சன் பதவியில் இருந்தபோது, ஊழலுக்காக விசாரணையை எதிர்நோக்கிய கட்டுமான நிறுவனத்திற்குச் சாதகமான சூழலை உருவாக்கித்தர அதிகாரிகள் தமக்கு நெருக்குதல் அளித்ததாக அவர் கடந்தாண்டு பிப்ரவரி மாதம் தெரிவித்ததை அடுத்து இந்த சர்ச்சை உருவானது.

இதனைத் தொடர்ந்து திருவாட்டி வில்சன் கடந்த ஜனவரி மாதம் பதவி இறக்கப்பட்டார். இதனை அடுத்து அவர் மறுமாதம் பதவி விலகினார். திரு ட்ரூடோ இந்தப் பிரச்சினையைக் கையாண்ட விதத்தை எதிர்க்கும் விதமாகத் திருவாட்டி ஃபில்பொட் பதவி விலகினார்.

"இந்த இருவர் மீதும் எங்கள் குழுவுக்கிருந்த நம்பிக்கை உடைந்துள்ளது," என்று திரு ட்ரூடோ, தனது மிதவாதக் கட்சியின் அவசரக் கூட்டம் ஒன்றின்போது கூறினார்.

நவம்பர் 2015ல் பிரதமர் பதவியை ஏற்ற 47 வயது திரு ட்ரூடோ, இவ்வாண்டின் பிற்பகுதியில் கடுமையான தேர்தலை எதிர்நோக்குகிறார்.