அமெரிக்காவும் சீனாவும் தங்களுக்கு இடையிலான வர்த்தகப் போரை முடித்துக்கொள்வதற்கான ஒப்பந்தம் ஒன்று தயாரிக்கப்பட்டு வருகிறது. ஆனால் அந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட இரு நாடுகளுமே தயாராக இல்லை என்று அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப், சீன துணைப்பிரதமர் லியூ ஹெவுடனான சந்திப்பில் தெரிவித்துள்ளார்.
சீனாவுடன் ஒப்பந்தத்தில் இணையும் தருணம் வெகு தூரத்தில் இல்லை என்று திரு டிரம்ப், வியாழக்கிழமை வெள்ளை மாளிகையில் நிகழ்ந்த அந்தச் சந்திப்பின்போது கூறினார். ஆயினும் ஒப்பந்தக் கையெழுத்து நடைபெறும் நேரம், இடம் ஆகியவற்றை அவர் உறுதி செய்யவில்லை.
நான்கு வாரங்களுக்குள் அந்த ஒப்பந்தம் அறிவிக்கப்படலாம் என்று திரு டிரம்ப் கோடிகாட்டியுள்ளார். ஒப்பந்தத்தின் கடினமான சில அம்சங்களுக்குத் தீர்வு காணப்பட்டதாக அவர் கூறினார். வர்த்தக ஒப்பந்தங்களில் இந்த ஒப்பந்தம் மிகச்சிறந்தது என்றும் திரு டிரம்ப் வர்ணித்தார்.
"எந்த நெடுந்தொலைவு ஓட்டத்திலும் அந்த ஓட்டத்தின் கடைசி மைல் தூரம் ஆக தூரமானதாகவும் ஆகக் கடினமானதாகவும் இருக்கும். எனவே நல்லதே நடக்கும் என்ற நம்பிக்கையுடன் நாங்கள் காத்திருப்போம், என்ன நடக்கிறது என்பதையும் நாங்கள் கவனிப்போம்," என்று வெள்ளை மாளிகையின் வர்த்தக ஆலோசகர் பீட்டர் நவரோ இது குறித்து கருத்துரைத்தார்.

