ஆட்சிப் பொறுப்பில் தொடர நஜிப் ரசாக்கை அனுமதிப்பதைவிட அன்வார் இப்ராகிமுடன் இணைந்து பணியாற்றுவது மிக முக்கியம் என்று மலேசியப் பிரதமர் மகாதீர் முகம்மது தெரிவித்து உள்ளார். தலைமைத்துவப் பொறுப்பை ஏற்க அன்வார் தகுதியானவரா என்பது தொடர்பில் முன்னர் தாம் விமர்சித்து இருந்தாலும், அன்வாரைவிட நஜிப் மோசமான தலைவராக இருப்பார் எனத் தாம் கண்டறிந்ததாக டாக்டர் மகாதீர் கூறினார். "நஜிப் ஆட்சிப் பொறுப்பில் தொடர்வதைவிட அவரது இடத்தில் அன்வார் இருப்பது ஏற்கத்தக்க ஒன்று என நான் கருதினேன். ஆகையால், இதற்குமுன் அவரைப் பற்றி நான் என்ன சொல்லியிருந்தாலும் சரி, என்னைப் பற்றி அவர் என்ன சொல்லியிருந்தாலும் சரி, அவருடன் இணைந்து பணியாற்றுவது என முடிவு செய்தேன்," என்று திரு மகாதீர் சொன்னார். 'நியூ ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்' இதழுக்கு அளித்த சிறப்பு நேர்காணலின்போது டாக்டர் மகாதீர் இவற்றைப் பகிர்ந்துகொண்டார். தமக்கும் அன்வாருக்கும் இடையே நீடித்த மோதல் போக்கு மேலும் தொடர்வதைவிட, நஜிப்பை ஆட்சியில் இருந்து அகற்ற வேண்டுமெனில் அன்வாருடன் சேர்ந்து பணியாற்றுவது எவ்வளவு முக்கியம் என்பதைத் தாம் உணர்ந்ததாக டாக்டர் மகாதீர் குறிப்பிட்டார். "நாங்கள் இருவரும் சேராவிடில், நஜிப் மீண்டும் பிரதமர் ஆவார் என்பதும் அவ்வாறு நடந்தால் அது நாட்டிற்குப் பேரழிவு என்பதும் எனக்குத் தெரியும்," என்றார் அவர். அத்துடன், செயலிழந்துவிட்ட பக்கத்தான் ரக்யாட்டை மீண்டும் கட்டமைப்பதில் அன்வாரின் தலைமைத்துவத் திறன் மீது தாம் நம்பிக்கை வைத்துள்ளதாகவும் திரு மகாதீர் குறிப்பிட்டார். "உண்மையில், பக்கத்தான் ரக்யாட்டின் சிற்பியே அவர்தான். ஒற்றுமையுடன் செயல்படாததால் பக்கத்தான் ரக்யாட் தோற்றுவிட்டது. ஆனால், நாங்கள் இணைந்த பிறகு எங்களால் அணுக்கமாகப் பணியாற்ற முடிந்தது. "அன்வார் அம்னோவில் இருந்து வந்தவர் என்பதும் எதிர்த்தரப்புக்கு அம்னோவைப் பிடிக்காது என்பதும் உண்மைதான். அம்னோவைவிட்டு விலகிய அவர், ஜனநாயக செயல் கட்சி, பாஸ் கட்சிகளைத் தமது கட்சியுடன் ஒன்றிணைத்துள்ளார். இது அவரது தலைமைத்துவப் பண்புகளை எடுத்துக் காட்டுகிறது," என்று டாக்டர் மகாதீர் கூறினார். பக்கத்தான் ஹரப்பான் கூட்டணியின் தலைவராக இருக்கும் திரு மகாதீர், அப்பதவியில் இருந்து தாம் விலகினாலும் அக்கூட்டணியைக் கட்டுக்கோப்பாக வைத்திருப்பது எப்படி என்பது அன்வாருக்குத் தெரியும் என்றார். தம்மால் கலந்துகொள்ள முடியாத சமயங்களில் அன்வாரின் துணைவியாரும் துணைப் பிரதமருமான டாக்டர் வான் அஸிஸா வான் இஸ்மாயில் அமைச்சரவைக் கூட்டங்களை நல்ல முறையில் வழிநடத்தியதாகவும் அவர் பாராட்டுத் தெரிவித்தார்.
மகாதீர் முகம்மது: நஜிப்பைவிட அன்வார் மேல்
2 mins read

