அடுக்கடுக்காகப் பொய்களைக் கூறி அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப்பின் உல்லாச விடுதிக்குள் நுழைந்ததாகக் குற்றம் சாட்டப்படும் சீனப் பெண் குறைந்தது இன்னொரு வாரத்திற்கு போலிசாரின் தடுப்புக் காவலில் இருக்க வேண்டுமென அமெரிக்க நீதிபதி ஒருவர் உத்தரவிட்டுள்ளார்.
திரு டிரம்ப் வழக்கமாக வாரயிறுதிகளில் செல்லும் 'மார்-அ-லாகோ' விடுதிக்குள் அத்துமீறி சென்றதற்கு வெவ்வேறு முரணான காரணங்களைக் கொடுத்ததன்பேரில் யூஜிங் ஸாங் என்ற அந்தப் பெண் கைது செய்யப்பட்டார்.
ஸாங் தங்கியிருந்த ஹோட்டல் அறையைச் சோதனை செய்த அதிகாரிகள், மறைக்கப்பட்ட கேமராக்கள், ஐந்து "சிம்" அட்டைகள், 8,000 டாலருக்கு அதிகமான ரொக்கம் ஆகியவற்றைக் கண்டுபிடித்தனர்.
இந்தச் சம்பவத்திற்கும் சீனாவின் உளவுத் துறைக்கும் ஏதேனும் தொடர்பு உள்ளதா என்று அமெரிக்காவிலுள்ள பல்வேறு அமைப்புகள் விசாரித்து வருவதாகச் சட்ட செயலாக்கம் மற்றும் தேசிய பாதுகாப்பு தொடர்புடைய ஆதார வாயில்களின் வழி ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தகவல் அறிந்தது.

