கோலாலம்பூர்: ஜோகூரின் பட்டத்து இளவரசர் இஸ்மாயில் இப்ராஹிமும் மற்ற மலேசியர்களைப் போல நாட்டின் சட்டத்துக்கு உட்பட்டு நடந்துகொள்ள வேண்டும் என்று மலேசிய பிரதமர் டாக்டர் மகாதீர் முகம்மது தெரி வித்துள்ளார். நாட்டின் சட்டங் களை மீறாத வரைக்கும் ஆளும் பக்கத்தான் ஹரப்பான் கூட்டணி யை அவர் விமர்சிக்கத் தடை ஏதுமில்லை என்று டாக்டர் மகாதீர் கூறினார். "ஜோகூர் பட்டத்து இளவரசர் கூறும் கருத்துகள் நாட்டை சீர்குலைக்கும் வகையில் அமைந் தால் அவருக்கு எதிராக நடவ டிக்கை எடுப்போம். அவரும் சட்டத்துக்கு உட்பட்டு நடந்து கொள்ள வேண்டும். மலேசியாவில் அனைவரும் சட்டத்துக்கு உட்பட்டு நடந்துகொள்ள வேண்டும்," என்று செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார் டாக்டர் மகாதீர். மலேசிய அரசாங்கத்தை விமர்சிக்க ஜோகூர் பட்டத்து இளவரசர் அரசியலுக்கு வர வேண்டுமா என்ற கேள்வி டாக்டர் மகாதீரிடம் எழுப்பப்பட்டது. அதற்குப் பதில் அளித்த டாக்டர் மகாதீர், அந்த முடிவை ஜோகூர் பட்டத்து இளவரசர்தான் எடுக்க வேண்டும் எனக் கூறினார். "அரசியலுக்கு வருவது குறித்து அவர்தான் முடிவெடுக்க வேண்டும். அரசியல் பாணி கருத்துகளை வெளியிட அவர் விரும்புகிறார். அவர் அதைத் தாராளமாகச் செய்யலாம். ஆனால் கருத்துச் சுதந்திரம் சாதாரண மலேசியக் குடிமகனுக்கும் உண்டு. "ஜோகூர் பட்டத்து இளவரசர் ஒரு மலேசியக் குடிமகன். அதற்கு மேல் ஏதுமில்லை," என்றார் டாக்டர் மகாதீர். ஜோகூர் முதல்வர் பதவி யிலிருந்து திரு ஒஸ்மான் சப்பியன் நேற்று பதவி விலகியதை அடுத்து ஜோகூர் பட்டத்து இளவரசர் கருத்து தெரிவித்திருந்தார். "ஜோகூரின் புதிய முதல்வர் மலேசிய அரசாங்கம் எது சொன்னாலும் தலையாட்டும் பொம்மையாக இருக்கக்கூடாது என்பது என் விருப்பம். "ஜோகூர் மாநிலம், அதன் மக்களின் நலனுக்கு முன்னுரிமை கொடுக்கப்பட வேண்டும்," என்று அவர் தெரிவித்தார்.
'ஜோகூர் பட்டத்து இளவரசரும் சட்டத்துக்கு உட்பட வேண்டும்'
2 mins read
மலேசிய பிரதமர் டாக்டர் மகாதீர் முகம்மது -

