தைவானைச் சேர்ந்த ஒரு பெண்ணின் கண்ணுக்குள் தேனீக்கள் வாழ்ந்து கொண்டிருந்ததாகப் பெண்ணின் கண்களைப் பரிசோதித்த மருத்துவர்கள் கண்டுபிடித்துள்ளனர். அந்தப் பெண்ணின் கண்களிலிருந்து நான்கு தேனீக்களைத் தாங்கள் அகற்றியிருப்பதாக தைவானின் ஃபூயின் பல்கலைக்கழக மருத்துவமனையைச் சேர்ந்த மருத்துவர்கள் கூறினர்.
'ஹே' என்ற அந்தப் பெண், உறவினர் ஒருவரின் கல்லறையைச் சுத்தம் செய்துகொண்டிருந்தபோது அந்தப் பூச்சிகள் நேரடியாக அவரது கண்களுக்குள் புகுந்தன. தமது கண்ணில் ஏதோ ஓர் எரிச்சலை உணர்வதாக ஹே கூறியிருந்தார். கண்ணுக்குள் தூசு அல்லது மணல் படிந்திருக்கலாம் என்றும் நினைத்ததாக அவர் தைவானிய ஊடகங்களிடம் தெரிவித்தார். ஆனால் அந்த எரிச்சல் கடும் வலியாக மாறியதை அடுத்து ஹே மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
செல்லுலிட்டிஸ், கெரட்டிடிஸ் ஆகிய நோய்களால் ஹே பாதிக்கப்பட்டிருந்ததாக மருத்துவர்கள் ஆரம்பத்தில் எண்ணினர். நுண்ணோக்கி ஒன்றின் வாயிலாக அவரது கண்ணுக்குள் தேனீக்கள் பதுங்கியிருந்ததைப் பின்னர் மருத்துவர்கள் கண்டுபிடித்தனர்.
'சுவெட் பீஸ்' என்ற வகையைச் சேர்ந்த இந்தத் தேனீக்கள், மனித வியர்வையால் கவரப்படுபவை என்று மருத்துவர்கள் தெரிவித்தனர்.

