தாய்லாந்து தலைநகர் பேங்காக்கின் 'சென்ட்ரல் வர்ல்ட்' கடைத்தொகுதி வளாகத்தில் இருக்கும் ஹோட்டலில் தீ மூண்டதில் குறைந்தது மூன்று பேர் உயிரிழந்தனர். அத்துடன் எழுவர் காயமடைந்ததாகவும் பேங்காக் நகர ஆளுநர் அஸ்வின் குவான்முவாங் ஊடகங்களிடம் தெரிவித்திருக்கிறார்.
'சென்டாரா கிராண்ட் அட் சென்ட்ரல் வர்ல்ட்' என்ற அந்த ஹோட்டல், ரட்சப்ரசோங் சாலைச்சந்திப்பில் அமைந்துள்ளது. 56 மாடிகளைக் கொண்ட அந்த ஹோட்டலின் எட்டாவது மாடியிலுள்ள ஓர் அறையில் அந்தத் தீ மூண்டதாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்தனர். பத்திரங்களை வைப்பதற்காக அந்த அறை பயன்படுத்தப்பட்டது.
தீயிலிருந்து வெளிவந்த கரும்புகை சுற்றுவட்டாரத்தைச் சூழ, பீதியடைந்த மக்கள் அங்கிருந்து விரைந்து செல்வதைச் சமூக ஊடகங்களில் பதிவேற்றம் செய்யப்பட்ட சில படங்கள் காட்டின.
தீ விரைவில் கட்டுப்படுத்தப்பட்டபோதும், ஹோட்டல் ஊழியர் ஒருவர் பயத்தால் மேல் மாடியிலிருந்து சன்னல் வழியாகக் குதித்து கீழே விழுந்து மடிந்ததாக பத்தும் வான் மாவட்டச் செயலாளர் திரு பினிட் அரயாசிலபத்தோர்ன் தெரிவித்தார்.
மேலும் இருவர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட பிறகு மாண்டதாக மருத்துவ அதிகாரிகள் உறுதி செய்தனர்.

