விக்கிலீக்ஸ் இணையத்தளத்தின் நிறுவனர் ஜூலியன் அசாஞ்யை லண்டன் நகர் போலிசார் கைது செய்துள்ளனர். அசாஞ்சுக்கு அளித்திருந்த அரசதந்திர ரீதியான அடைக்கலத்தை எக்குவடோர் குடியரசு ரத்து செய்ய முடிவெடுத்ததை அடுத்து அவர் கைது செய்யப்பட்டதாக பிரிட்டிஷ் போலிசார் தெரிவித்தனர்.
இந்தக் கைதுக்குச் சில மாதங்கள் முன்னர் அசாஞ்சுக்கான அடைக்கலம் ரத்து செய்யப்பட்டதாக எக்குவடோரின் அதிபர் லெனின் மொரெனோ அறிவித்தார். அனைத்துலக விதிமுறைகளை அசாஞ் தொடர்ந்து மீறியதால் இந்த முடிவை எக்குவடோர் அரசாங்கம் எடுத்ததாக அவர் கூறினார்.
ஏழு ஆண்டுகளுக்கு முன்னர், தன் மீது சுவீடன் தொடர்ந்துள்ள பாலியல் வதைக் குற்றச்சாட்டிலிருந்து தப்பிக்க அசாஞ் பிரிட்டனில் இருக்கும் எக்குவடோர் தூதரகத்தில் தஞ்சம் புகுந்தார். அந்தக் குற்றச்சாட்டு பிறகு கைவிடப்பட்டது.
குற்றச்சாட்டு தன் மீது சுமத்தப்பட்டிருந்தபோது நீதிமன்றத்தில் சரணடையத் தவறியதற்காக அசாஞ் கைது செய்யப்பட்டதாக பிரிட்டிஷ் போலிசார் தெரிவித்தனர். இந்தக் குற்றச்சாட்டு தனக்கு எதிரான சதி என்றும் 'விக்கிலீக்ஸ்' பற்றிய விசாரணையை மேற்கொள்ள அமெரிக்கா விரும்பியதே இதற்குக் காரணம் என்று அசாஞ் கூறுகிறார்.
"இப்போது ஜூலியன் அசாஞ் போலிஸ் தடுப்புக் காவலில் இருக்கிறார். பிரிட்டனில் அவருக்கு உகந்த சட்ட ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது," என்று உள்துறை அமைச்சர் சஜிட் ஜாவிட் தமது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்தார்.
"ஒத்துழைப்பு நல்கிய எக்குவடோருக்கும் நிபுணத்துவத்துடன் நடந்துகொண்ட பிரிட்டனின் போலிசாருக்கும் எனது நன்றியைத் தெரிவிக்கிறேன். எவரும் சட்டத்தைவிட உயர்வானவர்கள் அல்லர்," என்றார் திரு ஜாவிட்.
மத்திய லண்டன் போலிஸ் நிலையத்தில் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள திரு அசாஞ் வெஸ்மினிஸ்டர் நீதிமன்றத்தில் விரைவில் முன்னிலையாக வேண்டும் என்று போலிசாரின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

