ஜோகூர்பாரு: ஜோகூர் மாநிலத் தின் புதிய முதலமைச்சராக புக்கிட் கெப்போங் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் ஷாருதீன் ஜமால் பதவி ஏற்றுக்கொண்டார். இந்தப் பதவி ஏற்பு நிகழ்ச்சி ஜோகூர் சுல்தான் இப்ராஹிம் இஸ்கந்தார் முன்னிலையில் நேற்று காலை நடந்தது. ஜோகூர் முதலமைச்சராக இருந்த ஒஸ்மான் சப்பியான் கடந்த ஏப்ரல் 8ஆம் தேதி பதவி விலகியதைத் தொடர்ந்து, பிரிபூமி பெர்சத்து கட்சியைச் சேர்ந்த 43 வயது ஷாருதீன் ஜோகூர் மாநிலத்தின் 17-வது முதலமைச்சராக பதவி ஏற்றுக் கொண்டார். சுகாதாரம், சுற்றுச்சூழல் மற்றும் விவசாயத் துறை குழுவின் தலைவரான டாக்டர் ஷாருதீன் ஜோகூர் சுல்தான் இப்ராஹிம் இஸ்கந்தார் முன்னிலையில் நேற்று பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்டார். பதவி ஏற்பு நிகழ்ச்சியில் ஜோகூர் பட்டத்து இளவரசர் துங்கு இஸ்மாயில் சுல்தான் இப்ராஹிம், ஜோகூர் சுல்தானின் மருமகன் டென்னிஸ் முகம்மது அப்துல்லா மற்றும் பக்கத்தான ஹரப்பான் கூட்ட ணியில் இடம் பெற்றுள்ள நான்கு கட்சிகளின் தலைவர்களும் கலந்துகொண்டனர். டாக்டர் ஷாருதீன் ஜோகூர் முதலமைச்சராக பதவி ஏற்றுக்கொண்ட பிறகு திரு ஒஸ்மானை கட்டியணைத்து அவர் ஆற்றிய சேவைக்கு நன்றி தெரிவித்துக் கொண்டார். பின்னர் ஜோகூர், கெம்பாசில் உள்ள பக்கத்தான் ஹரப்பான் அலுவலகத்தில் முதலமைச்சராக டாக்டர் ஷாருதீன் தனது முதல் பத்திரிகையாளர் சந்திப்பை நடத்தினார். செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஜோகூர் மாநிலத்தின் புதிய நிர்வாக மன்ற உறுப்பினர்கள் விரைவில் தேர்ந்தெடுக்கப் படுவார்கள் என்று கூறினார். இதற்கிடையே ஜோகூர் சுல்தான் இப்ராஹிம் இஸ்கந்தார், புதிய முதலைமச்சர் டாக்டர் ஷாருதீன் நேர்மை, நம்பிக்கை கொண்டவராக இருப்பதோடு அரசியல் மற்றும் சுய நலன்களுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் ஜோகூரின் பொருளியல் மற்றும் மக்கள் நலனுக்கு முன்னுரிமை அளிப்பார் என்று தான் நம்புவதாகக் கூறியுள்ளார். அத்துடன் நீர்வளங்கள் எப்போதும் சுத்தமாகவும் நீண்ட காலத்திற்கு பயன்படுத்தும் வகையிலும் இருப்பதை உறுதி செய்ய நீர்வளங்கள் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளுக்கு புதிய முதலைமைச்சர் தீர்வு காண வேண்டும் என்று தான் விரும்புவதாகவும் ஜோகூர் சுல்தான் இப்ராஹிம் இஸ்கந்தார் கூறினார்.
ஜோகூர் முதலமைச்சராக ஷாருதீன் ஜமால் பதவி ஏற்பு
2 mins read

