வருமான வரி விவரத்தை சமர்ப்பிக்க டிரம்ப்புக்கு நெருக்குதல்

வருமான வரி விவரத்தை சமர்ப்பிக்க டிரம்ப்புக்கு நெருக்குதல்

1 mins read

வா‌ஷிங்டன்: அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் அவரின் வருமான வரி விவரங்கள் அடங்கிய படிவத்தை நாடாளுமன்ற ஜனநாயகக் கட்சியினரிடம் இம்மாதம் 23ஆம் தேதிக்குள் அவசியம் சமர்ப்பிக்க வேண்டும் என்று ஜனநாயகக் கட்சியினர் வலியுறுத்தியுள்ளனர். ஏற்கெனவே இம்மாதம் 10ஆம் தேதி திரு டிரம்ப் அவரின் வருமான வரி விவரங்களை தெரிவிக்க வேண்டும் என்று காலக்கெடு கொடுக்கப்பட்டிருந்தது. ஆனால் அந்த தேதிக்குள் திரு டிரம்ப்பின் வருமான வரி விவரங்களைத் தெரிவிக்க டிரம்ப் நிர்வாகம் தவறிவிட்டதாகக் கூறப்படுகிறது. அதனைத் தொடர்ந்து புதிய தேதியை ஜனநாயகக் கட்சியினர் அறிவித்துள்ளனர். முன்னதாக திரு டிரம்ப், தனது வருமான வரி படிவங்கள் வருமான வரித்துறை அதிகாரிகளால் தணிக்கை செய்யப்பட்டு வருவதால் அந்த விவரங்களை தெரிவிக்க இயலாது என்று கூறியிருந்தார்.