முஸ்லிம் பெண் நாடாளுமன்ற உறுப்பினருக்கு எதிராக அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் வன்முறையைத் தூண்டவில்லை என்று வெள்ளை மாளிகையின் பேச்சாளர் சாரா சாண்டர்ஸ் தற்காத்துப் பேசியுள்ளார்.
இல்ஹான் ஓமார் என்ற அந்த நாடாளுமன்ற உறுப்பினர் உரையாற்றிக்கொண்டிருந்ததைக் காண்பிக்கும் காணொளித் துணுக்குகள், 'செப்டம்பர் 11' தாக்குதலைக் காட்டும் படங்களுடன் கோர்க்கப்பட்டிருந்த காணொளி ஒன்றைத் திரு டிரம்ப் தமது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டதை அடுத்து சர்ச்சை மூண்டது.
திருவாட்டி ஓமாருக்கு எதிராக அந்த டுவிட்டர் பதிவு வன்முறையைத் தூண்டலாம் என்று சிலர் கவலை தெரிவித்துள்ளனர்.
"சில பேர் சிலவற்றைச் செய்துள்ளனர்," என்று தாக்குதலைப் பற்றி திருவாட்டி ஓமார் வர்ணித்ததைக் காணொளி காட்டியிருந்தது. இது குறித்து இணையவாசிகள் பலர் தங்கள் அதிருப்தியை வெளியிட்டனர். காணொளியின் இறுதியில் "செப்டம்பர் 11, 2001, என்றென்றும் நினைவில் கொள்வோம்," என்ற வாசகமும் இடம்பெற்றிருந்தது.
திருவாட்டி ஓமார் சொல்லவந்த கருத்தை இந்தக் காணொளி வேறுவிதமாகத் திரித்துக் காண்பிக்கிறது என்றும் இதனால் அவரது உயிருக்கு ஆபத்து நேரலாம் என்றும் ஜனநாயகக் கட்சியின் இடதுசாரியிலுள்ள சிலர் தெரிவித்தனர்.
ஆயினும், திரு டிரம்ப் யார் மீதும் பகையும் வன்முறை எண்ணங்களும் கொண்டிருக்கவில்லை என்று திருமதி சாண்டர்ஸ் ஏபிசி தொலைக்காட்சியிடம் தெரிவித்தார். திருவாட்டி ஓமார் தொடர்ந்து கூறிவரும் ஏற்கத்தகாத கருத்துகளை ஜனநாயகக் கட்சியினர் கண்டுகொள்ளாமல் இருப்பது வெறுப்பிற்குரியது என்றும் திருமதி சாண்டர்ஸ் சாடினார்.

