‘ஜெட் ஏர்வேஸின்’ வீழ்ச்சியால் ஹாங்காங்கில் ஆத்திரம்

இந்தியாவுக்குச் செல்வதைவிட இப்போது லண்டனுக்குச் செல்வது மலிவாகுமாம்.

கடந்த வெள்ளிக்கிழமை இந்தியாவைச் சேர்ந்த ‘ஜெட் ஏர்வேஸ்’ நிறுவனம் தனது அனைத்துலகப் பயணங்களைத் திடீரென ரத்து செய்ததால் ஆயிரக்கணக்கான பயணிகள் செய்வதறியாது திணறினர்.

‘ஜெட் ஏர்வேஸ்’ நிறுவனத்தின் நிதி நெருக்கடியால் ஹாங்காங்கிலிருந்து இந்தியாவுக்குச் செல்லும் விமானச்சீட்டுகளின் கட்டணம் அதிக அளவில் உயரக்கூடும் என்று ஹாங்காங்கின் ‘சவுத் சைனா மார்னிங் போஸ்ட்’ தெரிவித்தது.

ஹாங்காங்கிலிருந்து இந்தியா செல்லும் பயணிகளின் எண்ணிக்கை அண்மை ஆண்டுகளில் கூடி வருவதாக ஹாங்காங்கின் விமான நிலைய ஆணையம் தெரிவித்தது. 

‘ஜெட் ஏர்வேஸ்’ நிறுவனத்தின் இந்த முடிவால் இந்தியாவுக்குச் செல்லும் விமான இருக்கைகளின் எண்ணிக்கை 25 விழுக்காடு குறைந்திருப்பதாகத் தகவல்கள் வெளிவந்தன.

தற்போது ‘கேத்தே பசிஃபிக்’, ‘ஏர் இந்தியா’ ஆகிய நிறுவனங்கள் மட்டுமே இந்தியப் பயணச் சேவைகளை வழங்குகின்றன.

ஹாங்காங்கின் ஏழாவது ஆகப் பெரிய வர்த்தகப் பங்காளியாக இந்தியா உள்ளது. இந்த நிகழ்வால் இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக உறவு பாதிக்கப்படலாம் என அஞ்சப்படுகிறது.

இதுபோலவே ‘கிங்ஃபிஷர் ஏர்லைன்ஸ்’ என்ற மற்றோர் இந்திய விமான நிறுவனம் கடன் சுமையால் ஹாங்காங்கிலும் உலக நாடுகளிலும் தனது செயல்பாட்டை நிறுத்தியது.