1எம்டிபி வழக்கு: நீதிமன்றத்தில் நஜிப் முன்னிலை

மலேசியாவின் முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் 1எம்டிபி நிதி மோசடி வழக்கு தொடர்பில் திங்கட்கிழமை நீதிமன்றத்தில் இரண்டாவது முறையாக முன்னிலையானார். 

கோலாலம்பூர் உயர் நீதிமன்றத்தை அடைந்த திரு நஜிப், அங்கு குழுமியிருந்த செய்தியாளர்களைக் கண்டும் காணாமலும் நீதிமன்ற அறைக்குள் சென்றார்.

பல்வேறு ஒத்திவைப்புகளுக்குப் பிறகு 65 வயது திரு நஜிப்பின் நீதிமன்ற விசாரணை இம்மாதம் ஏப்ரல் 3ஆம் தேதி தொடங்கியது. தன் மீது சுமத்தப்பட்டுள்ள ஏழு குற்றச்சாட்டுகள் அனைத்தையும் திரு நஜிப் மறுத்தார்.

1எம்டிபி நிறுவனத்திலிருந்து பல பில்லியன் டாலர் கொள்ளையடித்து, சொகுசு பொருட்களை வாங்குவதற்குச் செலவு செய்ததாகத் திரு நஜிப்பும் அவருக்கு நெருங்கியவர்கள் சிலரும் குற்றம் சாட்டப்படுகின்றனர்.

இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்துவர, திரு நஜிப்பின் தலைமையிலான அரசாங்கம் கடந்தாண்டு படுதோல்வி கண்டது. தேசிய முன்னணிக்கு இதுவரை ஏற்பட்டிராத தோல்வி திரு நஜிப்பின் தலைமையில் முதன்முறையாக ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து  திரு நஜிப் கைது செய்யப்பட்டார்.