வளர்த்தவரைக் கொன்ற பறவை

பண்ணை ஒன்றில் வளர்க்கப்பட்ட ‘கசோவரி’ இனப்பறவை, அதன் உரிமையாளரைத் தாக்கிக் கொன்றது. அமெரிக்காவில் புளோரிடாவின் அலாச்சுவா மாவட்டத்திற்கு அருகிலுள்ள பண்ணையில் இந்தச் சம்பவம் கடந்த வெள்ளிக்கிழமை நிகழ்ந்தது.

அந்தப் பறவையுடன் வேறு வகைகளைச் சேர்ந்த அரிய பறவைகளை 75 வயது மார்வின் ஹஜோஸ் தமது பண்ணையில் வளர்த்து வந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். உதவிக்கான அழைப்பு காலை 10 மணிக்கு வந்ததாக அவசரகால மருத்துவ உதவி அதிகாரிகள் தெரிவித்தனர். பறவையால் பலமாகக் காயமடைந்த திரு ஹஜோஸ் மருத்துவமனையில் உயிரிழந்ததாகத் தகவல்கள் கூறுகின்றன.

சம்பந்தப்பட்ட ‘கசோவரி’ பறவையை வனவிலங்குப் பாதுகாப்பு அதிகாரிகள் தடுத்து வைத்துள்ளனர். மக்களுக்கு ஆபத்தை விளைவிக்கக்கூடிய மிருகங்களில் ஒன்றாக இந்தப் பறவையை அமெரிக்க வனவிலங்கு அதிகாரிகள் வகைப்படுத்தியுள்ளனர். ‘கசோவரி’ இனப்பறவைகள் ஆஸ்திரேலியா, நியூ கினி ஆகிய நாடுகளைப் பூர்விகமாகக் கொண்டவை. 

நெருப்புக்கோழிகள், ஈமூ பறவைகளுக்கு நெருக்கமானவை. இவற்றின் பாத நகங்கள் மிகவும் கூர்மையானவை என்பதால் மனிதர்களுக்கு ஆபத்தை விளைவிக்கக்கூடியவை.