கோலாலம்பூர்: 1எம்டிபி கணக்குத் தணிக்கை அறிக்கையை மாற்றியமைத்த காரணத்திற்காக மலேசியாவின் முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் மற்றும் 1எம்டிபி நிறுவன முன்னாள் தலைமை நிர்வாகி அருள் கந்தா மீது இவ்வாண்டு நவம்பர் மற்றும் அடுத்த ஆண்டு ஜனவரியில் வழக்கு விசாரணை நடைபெறும் என கோலாலம்பூர் உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. நவம்பர் 18ஆம் தேதியிலிருந்து 29ஆம் தேதி வரையிலும் அடுத்த ஆண்டு ஜனவரி 13ஆம் தேதியிலிருந்து 17ஆம் தேதி வரையிலும் இந்த வழக்கு விசாரணை நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. நீதிபதி முகம்மது ஸைனி மஸ்லான் நேற்று இந்த உத்தரவைப் பிறப்பித்தார். இந்த வழக்கில் தங்கள் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை ஏற்க மறுத்த நஜிப்பும் அருள் கந்தாவும் ஒன்றாகவே அதை எதிர்கொள்ள முடிவெடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்த வழக்குத் தொடர்பாக கிட்டத்தட்ட 30 சாட்சிகளை நீதிமன்றம் விசாரிக்க இருப்பதாக அரசாங்கத் தரப்பு துணை வழக்கறிஞர் ஃபட்னின் யூசோஃப் குறிப்பிட்டார்.
நவம்பரில் 1எம்டிபி வழக்கு விசாரணை
1 mins read

