மனிதர்களை முந்திக்கொண்டு 5ஜி தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துகின்றன, பிரிட்டிஷ் பால் பண்ணையிலுள்ள இந்த மாடுகள்!
அதிவேக இணையத்தை உறுதி செய்வதாகக் கூறப்படும் இந்த 5ஜி சேவையைச் சோதிப்பதற்கான மூன்று இடங்களை 'சிஸ்கோ சிஸ்டம்ஸ்' தொழில்நுட்ப நிறுவனம் கிராமங்களில் அமைத்துள்ளது. இயந்திர பால் கறக்கும் முறையைக் கட்டுப்படுத்தும் கழுத்துவாரை இந்தப் பண்ணையிலுள்ள பசுக்கள் அணிந்துள்ளன.
பால் கறக்கப்படத் தயாராக இருக்கும்போது, அந்தப் பசுக்கள் தானாகவே திறக்கும் இயந்திர நுழைவாயில்களை நெருங்கி அவற்றைக் கடந்து செல்லும். மற்றோர் இயந்திரம் பசுக்களிலிருந்து பாலைக் கறக்கத் தொடங்கும். மூன்றாவது இயந்திரம் பசுவுக்கு நன்றி செலுத்தும் விதமாகத் தீனியைக் கொடுக்கும்.
இந்த இயந்திரங்கள் அனைத்தும் 5ஜி தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துகின்றன. அவற்றால் பசுக்களுக்கு எந்தத் தீங்கும் நேர்வதில்லை. மாறாக, பசுக்களுக்கு ஏற்படும் உபாதைகளை உணர்ந்து அதுபற்றி பண்ணையாளர்களிடம் தெரிவிக்கும் வல்லமையை இந்த இயந்திரங்கள் கொண்டிருப்பதாகக் கூறப்படுகிறது.
பசுக்களின் தோலைத் தேய்ப்பதற்கான தானியக்கத் துலக்கிகள், வானிலை அறிந்து திறந்து மூடும் திரைச்சீலைகள், பசுக்களுக்குத் தீனி வழங்கும் அறிவார்ந்த அமைப்பு ஆகிய தொழில்நுட்பங்களை இந்தப் பண்ணை பயன்படுத்துகிறது.
5ஜி தொழில்நுட்பம் வழியாகப் பண்ணையின் ஒவ்வொரு மிருகத்துடனும் இணையம் வழி இணைய முடியும் என்று சிஸ்கோவின் நிக் கிறிசோஸ் தெரிவித்தார்.