ஜகார்த்தா: இந்தோனீசியாவில் தேர்தல் முடிந்து மூன்று நாட்கள் ஆகிவிட்ட நிலையில் அதிகாரபூர்வ வாக்கு எண்ணிக்கை முடிவுற 35 நாட்கள் ஆகலாம் என்று தேர்தல் ஆணையத்தின் தலைவர் அரிஃப் புடிமேன் கூறியுள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய அரிஃப், புதன்கிழமை தேர்தல் முடிந்தபிறகு வாக்குகள் கட்டம் கட்டமாக எண்ணப்பட்டு வருவ தாகக் கூறினார். வாக்குகளை முழுமையாக எண்ணி முடிக்க ஒரு மாதத்திற்கு மேல் ஆகலாம் என்பதால் அதிகாரபூர்வ தேர்தல் முடிவுகளை அறிய மக்கள் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்றபட்டுள்ள தாகவும் திரு அரிஃப் கூறினார். எதிர்பார்ப்பதைவிட வாக்குகள் விரைவாக எண்ணப்பட்டு அதிகாரபூர்வ தேர்தல் முடிவுகள் வெகு விரைவில் வெளிவருவதற் கான சாத்தியத்தையும் அவர் மறுக்கவில்லை. ஆரம்பக்கட்ட வாக்கு எண்ணிக்கையில் தற்போதைய அதிபர் ஜோக்கோ விடோடோ முன்னணியில் இருப்பதாக தகவல்கள் வெளிவந்தபோதிலும் அதிகாரபூர்வ தேர்தல் முடிவை தேர்தல் ஆணையம் அறிவிக்கும் வரை காத்திருக்குமாறு ஆதர வாளர்களை திரு ஜோக்கோ கேட்டுக்கொண்டுள்ளார். இந்நிலையில் தேர்தலில் திரு ஜோக்கோவை எதிர்த்துப் போட்டியிட்ட முன்னாள் ராணுவத் தளபதி பிரபோவோ ஆரம்பக்கட்ட வாக்கு எண்ணிக்கை முடிவை ஏற்கப்போவதில்லை என்று கூறினார். தேர்தலில் தமக்கே வெற்றி என்று அவர் தொடர்ந்து கூறி வருகிறார். பல இஸ்லாமிய குழுக்களின் ஆதரவு பெற்ற திரு பிரபோவோ நேற்று வெள்ளிக்கிழமை தொழுகைக்குப் பிறகு தெற்கு ஜகார்த்தாவில் நடந்த பேரணியில் கலந்துகொண்டார். அங்கு ஆயிரக்கணக்கான ஆதரவாளர் களை அவர் வரவேற்றார். பின்னர் அவர் தனது ஆதரவாளர்கள் முன்னிலையில் உரையாற்றினார். ஆரம்பக்கட்ட வாக்கு எண்ணிக்கை முடிவை நம்ப வேண்டாம் என்று அவர் தனது ஆதரவாளர்களை கேட்டுக் கொண்டார். தேர்தல் அமைதியாக நடந்துமுடிந்தபோதிலும் வெற்றி யாருக்கு என்பது தெரியாத நிலையில் அங்கு குழப்பம் நீடிக்கிறது. இதனால் கலவரம் மூளக்கூடும் என்ற அச்சத்தில் ஜகார்த்தாவில் பாதுகாப்பு வலுப் படுத்தப்பட்டுள்ளது. ஏராளமான ராணுவ வீரர்களும் போலிசாரும் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர்.
அதிகாரபூர்வ தேர்தல் முடிவு தெரிய 35 நாட்கள் ஆகலாம்
2 mins read

