இலங்கை தொடர் குண்டு வெடிப்பு: உலகத் தலைவர்கள் கண்டனம்

இலங்கை தொடர் குண்டு வெடிப்பு: உலகத் தலைவர்கள் கண்டனம்

2 mins read
6f367bdf-451f-4230-b5d5-fe16a31c33d7
செயின்ட் அந்தோணியார் தேவாலயத்தில் குண்டு வெடித்ததைத் தொடர்ந்து அந்த இடத்தை  இலங்கைப் பிரதமர் ரணில் விக்ரமசிங்கே பார்வையிட்டார்.  படம்: இபிஏ  -

கொழும்பு: இலங்கையில் பலரின் உயிரைப் பறித்த குண்டு வெடிப்பு தாக்குதல்களுக்கு உலக நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன. இலங்கையில் தேவாலயங்களி லும் ஹோட்டல்களிலும் நடத்தப் பட்ட குண்டு வெடிப்பு தாக்குதல் கள் முற்றிலும் மனிதாபிமானமற்ற செயல் என்று இலங்கை முன்னாள் அதிபர் மஹிந்த ராஜபக்சே கூறினார். பயங்கரவாதச் செய லுக்கு எதிராக நாட்டு மக்கள் ஒன்றுபட்டு நிற்பார்கள் என்றும் அவர் டுவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளார். இலங்கையில் நடந்த குண்டு வெடிப்பு சம்பவத்திற்கு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இலங்கை மக்களோடு இந்தியா துணை நிற்கும் என்றும் அவர் கூறியுள்ளார். இலங்கையில் உள்ள தற்போதைய நிலைமையை உன்னிப்பாக கவனித்து வருவதாகவும் கொழும்பில் உள்ள இந்தியத் தூதரிடம் தொடர்பு கொண்டு அங்குள்ள சூழ்நிலையை கேட்டு வருவதாகவும் இந்திய வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜ் டுவிட்டரில் கூறியுள்ளார். அந்த தாக்குதல்கள் பயங்கர மானது என்றும் அர்த்தமற்ற சோக நிகழ்வு என்றும் மலேசிய முன்னாள் துணைப் பிரதமரும் கெஅடிலான் கட்சித் தலைவருமான அன்வார் இப்ராஹிம் கூறினார். திரு அன்வாரின் மனைவி வான் அசிசாவும் இலங்கையில் நடந்த தாக்குதல்களுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். இந்த நேரத்தில் இலங்கைக்கு ஆஸ்திரேலியா ஆதரவாக இருக்கும் என்று ஆஸ்திரேலியப் பிரதமர் மோரிசன் கூறியுள்ளார். இலங்கையில் நடந்த கொடூரத் தாக்குதல்களுக்கு நியூசிலாந்து, பிரிட்டன், ஜெர்மனி, ஆப்கானிஸ்தான், ஜோர்தான் ஆகிய நாடுகளும் கண்டனம் தெரிவித்துள்ளன. கிறிஸ்துவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள் அதிர்ச்சிக்கு உள்ளாக்கும் செயல்கள் என்று பிரிட்டிஷ் பிரதமர் தெரேசா மே குறிப் பிட்டுள்ளார். இலங்கையில் நடந்த தொடர் குண்டு வெடிப்பு தாக்குதல்கள் குறித்து அதிர்ச்சி கொள்வதாக ஜெர்மன் அரசாங்கம் தெரிவித்துள்ளது. இலங்கையில் ஈஸ்தர் தினமான நேற்று 8 இடங்களில் அடுத்தடுத்து குண்டு கள் வெடித்ததில் குறைந்தது 207 பேர் கொல்லப்பட்டதாகவும் நூற்றுக்கணக்கானோர் காயம் அடைந்ததாகவும் இலங்கை அதிகாரிகள் கூறினர். இலங்கையில் நடந்த குண்டு வெடிப்பு சம்பவங்களால் அங்குள்ள மக்கள், பாதிரியார்கள் மற்றும் போலிஸ் அதிகாரிகள் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாகியிருப்பதாக அங்குள்ள நிருபர் ஒருவர் கூறியுள்ளார். கொழும்பில் உள்ள புனித அந்தோணியார் தேவாலயத்தின் பாதிரியார்கள் சிலரிடம் பேசிய பிபிசி செய்தியாளர் ஒருவர், அதிர்ச்சியில் அவர்களால் அந்த சம்பவம் பற்றி எதுவும் கூற முடியவில்லை என்று கூறினார். 2009ஆம் ஆண்டுக்குப் பிறகு இத்தகைய மோசமான சம்பவத்தை இலங்கை மக்கள் பார்த்ததில்லை என்று கூறப்படுகிறது. இதனால் இலங்கை மக்கள் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாகியிருப்பதாக அங்கிருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன. குண்டு வெடிப்பு தாக்குதல்களுக்கு யார் காரணம் என்பது இன்னும் கண்டறியப் படவில்லை. குண்டு வெடிப்பில் உயிரிழந்தவர்களில் குறைந்தது 35 பேர் வெளிநாட்டினர் என்று போலிசார் கூறினர்.