கிறிஸ்துவர்கள் புனித நாளாகக் கருதும் ஈஸ்டர் ஞாயிற்றுக்கிழமையன்று இலங்கையிலுள்ள சில தேவாலயங்களிலும் ஹோட்டல்களிலும் குண்டுவெடிப்புச் சம்பவங்கள் நிகழ்ந்தன. இதில் 200க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர்; நூற்றுக்கணக்கானோர் காயமடைந்தனர். அது குறித்து சில தகவல்கள்:
- ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல் 21) உள்ளூர் நேரப்படி சுமார் 8.45 மணிக்கு வெடிப்புகள் தொடங்கின. 'செயின்ட் செபஸ்டியன்' தேவாலயம் ஆக மோசமாகத் தாக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. கொழும்பிலுள்ள 'செயின்ட் அந்தோனிஸ்' தேவாலயம், மட்டக்களப்பிலுள்ள 'சாயன் தேவாலயம்' ஆகியவை தாக்கப்பட்ட மற்ற தேவாலயங்கள்.
- தலைநகர் கொழும்பில் 'த ஷங்ரிலா', 'த சின்னமன் கிராண்ட்', 'த கிங்ஸ்பரி' ஆகிய ஹோட்டல்களில் தாக்குதல்கள் நேர்ந்தன.
- இதற்கு அடுத்ததாக மேலும் சில வெடிப்புச் சம்பவங்கள் ஏற்பட்டன. டேஹிவாலா புறநகர்ப்பகுதியிலுள்ள தேசிய விலங்கியல் தோட்டத்திற்கு அருகிலுள்ள ஹோட்டலில் முதல் வெடிப்புச் சம்பவம் நடந்தது. டெமாடகோடா என்ற ஊரில் மற்றொரு குண்டு வெடித்தது.
- தாக்குதல்களில் மொத்தம் குறைந்தது 207 பேர் மாண்டனர். மேலும் 450 பேர் தாக்குதலில் காயமடைந்ததாக போலிசார் தெரிவித்தனர். உயிரிழந்தோரில் குறைந்தது 35 பேர் வெளிநாட்டினர்.
- தாக்குதலின் தொடர்பில் 13 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் ஒருவர் தனது பெயரை 'முகம்மது அஸாம் முகம்மது' என்று 'த சின்னமன் கிராண்ட்' ஹோட்டலில் பதிவு செய்திருக்கிறார். ஆயினும் இது அவரது உண்மையான பெயரா என்பது உறுதி செய்யப்படவில்லை. சந்தேக நபர்கள் யாவர் என்பதும் எந்த அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்பதும் புலப்படவில்லை.
நேற்று மாலை 6 மணி முதல் இன்று காலை 6 மணி வரை இலங்கை அரசாங்கம் ஊரடங்கு உத்தரவைப் பிறப்பித்திருந்தது.

