டுவிட்டரில் பிழை; மீண்டும் ஏளனம்

இலங்கையில் நேர்ந்த வெடிகுண்டு தாக்குதலில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவிக்கும் பதிவு ஒன்றை அதிபர் டிரம்ப் டுவிட்டரில் எழுதியிருக்கிறார். இலங்கைக்கு உதவிக்கரம் நீட்ட அமெரிக்கா தயாராக இருப்பதாகவும் டிரம்ப் தெரிவித்தார்.

இருந்தபோதும், தாக்குதலில் மாண்டோரின் எண்ணிக்கையை “138 மில்லியன்” என்று திரு டிரம்ப் அந்தப் பதிவில் தவறுதலாக எழுதியிருந்ததால் அவர் இணையத்தில் குறைகூறல்களுக்கு ஆளாகியுள்ளார். இலங்கையின் மொத்த மக்கள் தொகையே 22 மில்லியன் என்று ‘வா‌ஷிங்டன் போஸ்ட்’ நாளிதழ் சுட்டியது.

ஒரு மணி நேரத்திற்குள் திரு டிரம்ப் அந்தப் பதிவை நீக்கி மற்றொரு பதிவை எழுதினார். புதிய பதிவில் 137 பேர் தாக்குதலில் உயிரிழந்ததாகத் திரு டிரம்ப் குறிப்பிட்டார்.

டுவிட்டரைத் திரு டிரம்ப் பயன்படுத்தும் விதத்தை அவரது விமர்சகர்கள் குறைகூறி வருகின்றனர். நியூசிலாந்து துப்பாக்கிச்சூடு நிகழ்ந்தபோது திரு டிரம்ப் அதனை அவ்வளவாகப் பொருட்படுத்தாமல் தமது அரசியல் எதிராளிகளையும் ஊடகங்களையும் குறைகூறுவதிலேயே நேரத்தைச் செலவிட்டதாக ‘நியூயார்க் டைம்ஸ்’ இதழின் செய்திக் கட்டுரை குறிப்பிட்டது. மேலும், அமெரிக்காவிலுள்ள மூன்று தேவாலயங்கள் தீக்கு இரையாகிய நிலையில் ‘நோட்ர டேம்’ தேவாலயம் தீப்பிடித்தது மட்டும் திரு டிரம்ப்பிற்குத் தெரிந்ததா என்றும் அந்தக் கட்டுரை வினவியது.