மணிலா: பிலிப்பீன்சின் தென் பகுதியில் இன்று மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டது. துடுபிகான் அருகே ஏற்பட்ட நிலநடுக்கத்தால் வீடுகளும் கட்டிடங்களும் ஆட்டங்கண்டன. நிலநடுக்கம் 6.4 ரிக்டர் எனும் அளவில் பதிவானது. ஆனால் நிலநடுக்கத்தால் பாதிப்புகள் மற்றும் சேத விவரங்கள் வெளியாகவில்லை.
பிலிப்பீன்சில் நேற்று வலுவான நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் பத்பன்கா மாகாணத்தில் பல நகரங்கள் அதிர்ந்தன. வீடுகள் மற்றும் கட்டிடங்கள் குலுங்கின. நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.3ஆக பதிவானது.
இதனால் பீதி அடைந்த மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி தெருக்களில் ஓட்டம் பிடித்தனர். இந்த நிலநடுக்கத்தில் போரக், லுபாகோ மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகள் பெரிதும் பாதிக்கப்பட்டன. இங்கு அடுக்குமாடி வீடுகள், காங்கிரீட் கட்டிடங்கள் இடிந்து விழுந்தன.
போரக் நகரில் நான்கு மாடிகளைக் கொண்ட ஒரு கட்டடம் இடிந்து விழுந்தது. அதில் சிக்கி தவித்த பலர் மீட்கப்பட்டனர்.
இந்த நிலநடுக்கத்தில் ஏற்பட்ட இடிபாடுகளில் சிக்கி 11 பேர் உயிரிழந்தனர்.
நிலநடுக்கத்தைத் தொடர்ந்து நில அதிர்வுகள் ஏற்படக்கூடும் என்று பிலிப்பீன்சின் புவியியல் ஆய்வு மையம் கூறியுள்ளது.

