'குப்பையை அள்ளுங்கள், இல்லையெனில் போர்'

'குப்பையை அள்ளுங்கள், இல்லையெனில் போர்'

1 mins read
3166e9c7-152f-4045-8bf4-fa0aac2ccda8
-

மணிலாவுக்கு அனுப்பிய குப்பைகளை கனடா திரும்ப எடுத்துக்கொள்ளவேண்டும் என்று பிலிப்பீன்ஸின் அதிபர் ரோட்ரிகோ டுட்டார்ட்டே தெரிவித்துள்ளார். அவ்வாறு செய்யத் தவறினால் இரு நாடுகளுக்கும் இடையே போர் ஏற்படலாம் என்றும் திரு டுட்டார்ட்டே எச்சரித்தார்.

2013ஆம் ஆண்டிலும் 2014ஆம் ஆண்டிலும் நச்சுக் குப்பைகளை கனடா பிலிப்பீன்ஸுக்கு அனுப்பியிருந்ததாக அந்நாடு கூறுகிறது. இருந்தபோதும், அனுப்பப்பட்ட பொருளைத் திரும்ப எடுத்துக்கொள்ள தனியார் நிறுவனம் ஒன்றை வற்புறுத்துவதற்குத் தனக்கு அதிகாரம் இல்லை என்று கனடிய அரசாங்கம் தெரிவித்தது.

குப்பைப்பொருளை கனடா திரும்ப எடுத்துக்கொள்ளாவிட்டால் தாமே அந்தக் குப்பையை எடுத்து கனடாவிலேயே போட்டுவிடப்போவதாகத் திரு டுட்டார்ட்டே ஆவேசத்துடன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

கனடாவைச் சேர்ந்த ஹெலிகாப்டர் நிறுவனத்திலிருந்து 16 ஹெலிகாப்டர்களைத் தருவிப்பதற்கான 235 மில்லியன் டாலர் ஒப்பந்தத்தைத் திரு டுட்டார்ட்டே கடந்த வாரம் திடீரென ரத்து செய்தார். போதைப்பொருளுக்கு எதிரான அவரது போரை மனித உரிமை மீறல் குறித்த அக்கறைகளின் பேரில் கனடா விமர்சித்ததால் திரு டுட்டார்ட்டே அதிருப்தியிலும் ஆத்திரத்திலும் இருப்பதாகக் கூறப்படுகிறது.